பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாலடியார்-தெளிவுரை

அடைந்தவர்களுக்கு இயன்றவரை உதவுவார்கள் என்று கூறி, அத்தகைய குடியினரின் பெருமை சொல்லப் பெற்றது. தெள்+நீர்=தெண்ணிர்-தெளிந்த நீர்.

16. மேன் மக்கள்

மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் எனப்படுவர். இவர்கள் செயற்கு அரியன செய்தலும், கற்று அறிவுடைமையும், நல்லனவே செய்தலன்றித் தீயன மனத்தானும் கருதாமையும், பிறருக்கு உதவும் அருளுடைமையும் ஆகிய பல்வேறு குணங்களுக்கும் உறைவிடமா யிருப்பார்கள்.

நல்ல குடிப்பிறப்பினால் நல்ல பண்புகள் அமைய அவர்கள் மேன்மக்களாக விளங்குதலும் வாய்ப்பதாகும். ஆயினும் அவருள்ளும் ஒரு சிலர் கீழோர் தொடர்பாலும் ஊழ்வினை வசத்தாலும் மேன்மக்கள் ஆகாமற் போதலும் கூடும். அதேபோலக் கீழான குடியிற் பிறந்தும், தம்முடைய தளரா முயற்சியாலும், வினைப்பயனாலும், உள்ளத்து உறுதியாலும் மேலான பண்பாளர்களாக விளங்குபவரும் பலர் உள்ளனர்.

இந்தப் பகுதி, எத்திறத்தாலும் மேன்மையான மக்கட் பண்பு உடையவர்களைப் போற்றுதல் பற்றிக் கூறுவதாகும்.

151. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃது ஆற்றார்; தெருமந்து தேய்வர், ஒருமாசு உறின். அழகிய இடத்தினை உடையதாகிய வானத்திலே யிருக்கும், பரந்த நிலவொளியை வீசுகின்ற திங்களும், சான்றோரும், பெரும்பாலும் தம்முள் ஒத்திருப்பார்கள். ஆனால் திங்கள் தன்பாற்சேரும் களங்கத்தைத் தான் பொறுத்துக் கொண்டு இருக்கும். சான்றோர்களோ அப்படிப் பொறுக்க மாட்டார்கள். ஒரு குற்றம் தம்பால் நேர்ந்தாலும் அதனை எண்ணி வருந்தித் தம் உயிரையே விட்டுவிடுவார்கள்.

இதனால், அகல் நிலாப் பாரிக்கும் திங்களினும் சான்றோர் சிறந்தவர் என்பது கூறப்பெற்றது. அவரும் தம் சான்றாண்மையால் உலகெங்கும் பரந்த புகழினராயிருப்பர் என்பது உணர்க.