பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவச்சர் இனத்தவர் ஒருவரும் வருவார்கள். வந்து அவசரம் அவசரமாகப் பணிகளை முடித்து விட்டு, ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். சித்திரை மாதம் சங்காபிஷேகம் என்று இரண்டுநாள் திருவிழா நடைபெறும் அப்போது ஊர்க்காரர்கள் கும்பிட வருவார்கள். மார்கழி மாதம் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நிகழும் திருவாதிரை நாளன்று பெருங்கூட்டம் திரளும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் வந்து குழுமுவர். கோயிலைச் சுற்றிலும் பலவிதமான கடைகளும் தோன்றி வியாபாரம் பண்ணும். முன்பெல்லாம் நடந்தும், மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்து சேர்வர். கிராமப்புறமெல்லாம்பஸ் போக்குவரத்து சர்வசாதாரணமாகியதும், செப்பறைக் கோயில் வரை விசேஷ பஸ் (ஸ்பெஷல் பஸ்) ஒடி பக்தர்களுக்கு வசதி செய்யலாயிற்று. - கோயில் அருகிலேயே ஏன் தொழிலாளிகள் குடியிருக்கவில்லை என்பதற்கு ஊர்க்காரர்கள் கர்ணபரம்பரையாகக் கதை சொல்வது வழக்கம் ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிலும் ஐயர்களும் இதர தொழிலாளிகளும் குடியிருந்தார்களாம். இரவு நடுச்சாமத்தில் கோயிலுக்குள் நடராஜர் ஆனந்தத்தாண்டவம் நிகழ்த்துவாராம். அவர் திங்குதிங்கெனக் குதிக்கிற ஒசை பயங்கரமாக ஒலிக்குமாம். அதனால் மனிதர்கள் பயம் கொண்டார்கள். மேலும், தாண்டவமிடும் நடராஜருக்கு சுற்றுப்புறத்தில் மனிதர்கள் இருந்தது பிடிக்கவில்லையாம் அவர்களுக்கு ஏதாவது நோய்வந்து கஷ்டப்படுத்தியதாம். ஐயர்கள் கனவிலும் தோன்றி சேதி சொன்னாராம் நடராஜர். எனவே அவர்கள் இடத்தைக் காலி பண்ணிவிட்டு ஊரோடு போய்விட்டார்கள். செப்பறை நடராஜர் (ஆனந்தக்கூத்தர்) உருவம் சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியுள்ள சிலையின் மாதிரியிலேயே வடிக்கப் பட்டிருக்கிறது. சிதம்பரத்தில் சிலை வார்த்த சிற்பியிடம் பயிற்சி பெற்றவரே இச் சிலையையும செய்தார் என்று சொல்லப்படுகிறது. இது பற்றியும் நெடுங்காலமாக ஒரு கதை நிலவுகிறது. சிதம்பரத்தில் சிலை நிறுவப்பட்ட பிறகு ஒரு சிற்பி திருநெல்வேலிப் பக்கம் வந்தார். தாமிரவர்ணி ஆறும் அதன் கரையின் சூழ்நிலையும் அவரை வசீகரித்தன. உடனே ஆற்றின் கரையில் நடராஜர் சிலை நிறுவவேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்படியே செய்து முடித்தார். 18 : வல்லிக்கண்ணன்