பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகுளத்தூர் ரோடில் தனியாக வெகுதூரம் போவது நல்லதல்ல என்று சிலர் எச்சரித்தார்கள். அந்தப் பக்கமெல்லாம் கொலையும் களவும் சகஜமாக சர்வசாதாரணமாக நடக்கும் மூன்று ரூபாயைப் பையிலிருந்து பறித்துக் கொள்வதற்காகக் கொலை செய்திருக்கிறார்கள். பையில் ஒன்றும் இல்லாது போனால் கூட ஏன் காசில்லாமல் வந்தே என்று கூறி ஆளை வெட்டித் தள்ளிவிடுவார்கள். கொலை செய்யத் தயங்காத நபர்கள் நிறைந்த பிரதேசம் அது என்று சொன்னார்கள். ஒரு சமயம் முதுகுளத்தூரில் தாசில்தாரை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தார்கள் என்ற செய்தியும் அப்போது எழுந்து பரவியது. முதுகுளத்தூர் விவசாய ஆபீசில் மேஸ்திரியாகப் பணிபுரிந்த லாரன்ஸ் என்பவர் தற்காப்புக்காக ஒரு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசன்ஸ் பெற்றிருந்தார். துப்பாக்கி வைத்திருக்கும் மேஸ்திரி என்ற தனிப் பெருமை அந்த இலாகாவில் அவருக்குக் கிடைத்திருந்தது. மேல்திசையில் நீண்டுகிடந்த வைகை ஆற்றின் விரிந்து பரந்திருந்த மணல் பரப்பில், தனிமைப் பெருவெளியில் நடந்து போய் திரும்பி வருவது எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. கரைகள் மீது ஒன்றிரண்டு மரங்கள் நின்றன. மணல் வெளியில் ஆள் நடமாட்டமே இராது. சிலசமயம் ஒற்றையாய் நரி நடந்து போகும் ஒடும். அதனால் ஆபத்து எதுவும் விளையவில்லை. அதுக்குத் தீங்கு எண்ணினால் தானே அது தாக்க முற்படும்? நான் என்பாட்டுக்கு நடப்பேன். நரி சும்மா பார்த்துவிட்டு அதன் வழியே போகும். மணல்வெளி யோகாசனம் செய்வதற்கும் வசதியான இடமாக இருந்தது. தனிமையில் இயற்கை வெளியில் ஆசனப் பயிற்சி செய்வது ஆனந்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது. ஆபீசுக்கு அடுத்த கட்டிடத்தில், கிருஷ்ணய்யர் ஒட்டலின் மேல் பகுதியில், மாடியில், ராயல் டைப் ரைட்டிங் இன்ஸ்டி டியூட் என்கிற தட்டச்சு பயிற்றுவிக்கும் நிலையம் ஒன்று இருந்தது. ராமநாதபுரம் ஊர்வாசியான நித்தியானந்தம் என்பவர் அதை நிர்வகித்து நடத்தினார். அவர் ஷார்ட்ஹேண்ட்டும் பயிற்றுவித்தார். காலை எட்டு மணிமுதல் இரவு ஒன்பது மணிமுடிய மாணவர்கள் வந்து பயின்று சென்று கொண்டிருந்தனர். நானும் டைப் கற்றுக் கொள்ளச் சேர்ந்தேன். காலை எட்டு மணிமுதல் ஒன்பது வரை பயிற்சி நேரம் நிலைபெற்ற நினைவுகள் : 191