பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைமாரில் ஒரு பிரிவினர் வசித்தனர். அவர்கள் 'செவளைப் பிள்ளைமார் எனப் பெயர்பெற்றிருந்தனர். அவர்கள் முடித்தானேந்தல் (முடிவைத்தானேந்தல்) என்ற ஊரில் வசித்த பிள்ளைமார் இனத்தின் கிளையினர்.நன்கு வளர்ந்து, உயரமாக திடமாக ஆரோக்கியமான உடல்கட்டுடன் இருப்பார்கள். அந்நாள்களில் ராணுவத்துக்கும், போலீஸ் இலாக்காவும் முடித்தானேந்தல் அதிக எண்ணிக்கையில் ஆள்களை உதவிக் கொண்டிருந்தது. அந்த ஊர்க்காரர்கள் நன்கு சாப்பிடக் கூடியவர்கள். செவளையான் சாப்பிடுகிற மாதிரிச் சாப்பிடுகிறாயே! என்று மிகுதினி உண்பவர்களை, பெரிய பெரிய உருண்டையாக எடுத்துச் சோறு சாப்பிடுபவர்களை பரிகசிப்பது அந்தப் பக்கத்தின் வழக்கமாக இருந்தது. செவளையான் ஒருவன் எங்கள் வீட்டில் வண்டிக்காரனாக வேலை பார்த்தான். தினம் அவன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இலை போட்டுச் சாதம் சாப்பிடுவதை பார்க்கும்போது எனக்கும் என் சகோதரர்களுக்கும் அதிசயமாகத் தோன்றும் அந்த வயசில் எல்லாமே அதிசயங்களாகப் பார்வையில் பட்டு மனசில் பதிந்தன. பெரிய குளத்திலிருந்து மதகுகள் வழியாக நீர் சிறுசிறு அருவிகளாக விழுந்து பள்ளத்தில் ஒடிய வாய்க்காலை அடைந்து ஓடும் அந்த அருவிகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அலுக்காமல் பார்த்து நிற்கலாம் என்றிருக்கும். குளத்தின் பரப்பில் நீர் அசைந்தாடும் சிற்றலை வீச்சும், கரை ஒர அரசமரங்களின் இலைகளும் அவற்றில் காலம் செய்கிற மாறுதல்களும் அதிசயங்கள் தான். பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டுச் சுவர் ஒரத்தில், வாசலின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை மரங்கள் ஒயாது வெண்ணிற மலர்களைச் சிந்தும். நீண்ட காம்புடைய அம்மலர்கள் தரையில் பரந்து கிடப்பது ஆச்சரியம். அம்மலர்களை எடுத்துச் சேர்ப்பது ஒரு விளையாட்டு பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் நீர்பாயும் ஒடையில் பசிய நிறக் கொடிகள் படர்ந்திருந்தன. அவற்றின் இலைகள் விநோத வடிவம் கொண்டவை. ஊரில் தென்னை மரங்கள் அதிகம் வளர்ந்து நின்று குளுமைக் காட்சிகளாக விளங்கின. ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பரதேசி, கழுத்தில் உத்திராட்சம் கட்டி காவி வேட்டி அணிந்து நெற்றி நிறையத் திருநீறு 52 : வல்லிக்கண்ணன்