பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்தக்காரர் பெட்டியை திறந்து பார்த்தார். எல்லாப் பொருள்களும் வைத்தது வைத்தபடியே இருப்பதாகக் கூறினார். மகிழ்ச்சிப் பெருக்கோடு கையெடுத்து அப்பாவை கும்பிட்டார். உங்களாலே தான், நான் இழந்த பொருள் எல்லாம் திரும்பக் கிடைத்திருக்கு. நீங்க நல்லாயிருக்கணும் மக ராசனா இருக்கணும் என்று வாழ்த்தினார். அவர் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார். மற்றவர்களும் போய்ச்சேர்ந்தார்கள். சிறிது நேரத்தில் மறக்குடித் தெருவை சேர்ந்த இரண்டு பெரியவர்கள் அப்பாவைப் பார்ப்பதற்காக வந்து, கும்பிட்டு நின்றார்கள். என்ன தேவரே, என்ன விஷயம் என்று அப்பா கேட்கவும் அவர்கள் மீண்டும் வணங்கினார்கள். எசமான், மன்னிக்கணும். எவனோ தெரியாத்தனமா தப்பு பண்ணிப் போட்டான். பயத்தினாலே அந்தப் பயல் எடுத்த சாமான்களை தனக்கென்று வைத்துக் கொள்ளவுமில்லை. தோட்டத்துக் கிணத்துப்பக்கமும், வாய்க்காலிலும் போட்டுவிட்டு, எங்கேயோ ஒடிப்போயிட்டான். எங்கே போனான்னு தெரியலே என்று சொன்னார்கள். அப்பா சிரித்தார். அவர்கள் தங்கள் இனத்தானை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று புரிந்துகொண்டார். போகட்டும்! பொருள்கள் தான் வந்துவிட்டனவே! என்று எண்ணினார். அப்படியா, போனாப் போகுது விடுங்க என்று கூறினார். உட்காருங்க, சாப்பிட்டு விட்டுப் போங்க என்றார். அவர்கள் பணிவுடன் வணங்கினார்கள். எசமான் தயவு இருந்தால் போதும் சாப்பாட்டுக்கு என்ன! நாங்க வாறோம் என்றார்கள். அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும்படி அப்பா கட்டளையிட்டார். அவ்வாறே கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட தேவர்கள் இருவரும் மீண்டும் கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினார்கள். கண்டிப்பாக நடந்து கொள்ளும் அப்பா கருணை காட்டவும் தவறுவதில்லை. நம்பினபேருக்கு நடராசர் நம்பாதபேருக்கு எமராசா என்று அடிக்கடி சொல்வது உண்டு. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்; எடுத்த எடுப்பிலேயே அடித்து உதைத்து மிரட்டினால் தான், உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும் என்று அவர் சொல்வார். அப்படியே செயலாற்றுவார். நிலைபெற்ற நினைவுகள் 3ல் 65