பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நிலைபெற்ற நினைவுகள் தாம்பத்திய உறவு பரஸ்பரம் திருப்தி அளிப்பதில்லை. அதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாமல் போகிறது இதை சில ஜோடிகள், கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும், அவரவர் அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மூடிமறைக்காமல் வெளிப்படையாகப் பேசுகிற தன்மையில் எழுதப்பட்ட நாவல் அது. கதை மாந்தர் ஒவ்வொருவரும் தனித்தனியாக உண்மைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும். அழகான உவமைகள், கற்பனைநயம், கவிதைத் தன்மை கொண்ட இனிய நடை, சுவாரசியமான கதை அமைப்பு, ரசம் மிகுந்த விவரிப்புகள் எல்லாம் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. ‘கருகிய மொட்டு’ நாவல் குறித்து பாராட்டுரைகளும், கடுமையான விமர்சனங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. காண்டேகர் விஷயங்களைப் பச்சையாக எழுதியிருக்கிறார் என்று அநேகர் குறிப்பிட்டார்கள். கு.ப.ராஜகோபாலன் அந்த நாவல் குறித்து கிராம ஊழியன் இதழில் நீண்ட விமர்சனக் கட்டுரை எழுதினார். 'பச்சையாவது, வெள்ளையாவது! வியத்தமாக எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்’ என்று குறிப்பிட்டு, காண்டேகர் ஆண் பெண் உணர்வுகளையும் உறவுகளையும் பற்றிய உண்மைகளைச் சரிவர எழுதவில்லை என்றும், நாவல் முழுவதும் காண்டேகர்தான் பேசுகிறாரே தவிர, பாத்திரங்கள் பேசவில்லை என்றும், இன்னும் பலவாறாகவும் கு.ப.ரா. விமர்சித்திருந்தார். ஆண் பெண் உறவுகள், உணர்ச்சிகளை அடிப்படையாக்கி அவர் கருகாத மொட்டு’ என்றொரு நாவல் எழுதத் திட்ட மிட்டார். அவர் எழுதத் தொடங்கிய நாவல் அரைகுறையாக நின்று போயிற்று. அதற்குள் அவர் மரணம் அடைந்தது தான் காரணம் ஆகும். காண்டேகர் பாணியில் தமிழில் சிலர் நாவல்கள் எழுதினார்கள். தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நாவல்கள் மிகுந்த கவனிப்புப் பெற்றன. புயல், கன்னிகா, முதல் இரவு என்று அவர் எழுதிய நாவல்களில், முதல் இரவு அதிகமான பரபரப்பை ஏற்படுத்தியது. அது ஆபாசமான நாவல் என்று கூறி அன்றையத் தமிழக அரசு அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். ‘கிராம ஊழியன் பொங்கல் மலருக்குக் கதை, கட்டுரை கேட்பதற்காக திருலோக சீதாராமும் நானும் போய் சந்தித்தவர்களுள் கா.சீ.வேங்கடரமணியும் ஒருவர். மயிலாப்பூர்