பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ; 105 ஞாபகம் வைத்திருந்து சொல்கிறீர்களே! எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார். நாங்கள் விடைபெற்றுப் புறப்படும்போதும், மலருக்கு நீங்கள் அவசியம் கதை எழுதி அனுப்ப வேண்டும், மறந்துவிடக் கூடாது' என்று திருலோகம் நினைவுபடுத்தினார். 'மறக்க முடியுமா என்ன? நல்ல இந்திய ரசிகர்களான நீங்கள் இரண்டு பேரும் இருட்டில் சிரமப்பட்டு வீடு தேடி என்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறீர்கள். கட்டாயம் கதை எழுதி அனுப்புவேன் என்று ஈஸ்வரன் உறுதி கூறினார். ஆனாலும் மலருக்கு அவர் கதை எழுதி அனுப்பவில்லை. எழுத்தாளர் க.நா. சுப்ரமணியத்தை கீமர் அன் கம்பெனியில் போய்ப் பார்த்தோம். அவர் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். சரித்திரத்தில் காணப்படுகிற சிறு விஷயங்களை சின்னக்குறிப்பு அல்லது தகவலை வைத்துக் கொண்டு ரசமான கதைகள் எழுதி வந்தார் அவர் தோட்டியை மணந்த ராஜகுமாரி என்ற பெயரில் அவருடைய சிறுகதைகள் புத்தகமாக வந்திருந்தன. கட்டபொம்மு வரலாற்றை ஆராய்ந்து ஒரு நூலும் எழுதியிருந்தார். வறண்ட தன்மையில் அமைந்த வரலாறு அது. கட்டபொம்மன் வரலாற்றுக் கதைகளில் காணப்பட்ட உணர்ச்சி வேகமும் விறுவிறுப்பும் அதில் இல்லை. எனவே அதைக் காயடித்த கட்டபொம்மு என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளார். சென்னை எழுத்தாளர்கள் பலரையும், திருலோக சீதாராம் உதவியோடு, ஒரு முறை சந்தித்ததுதான். நான் மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்று விரும்பியதில்லை. ஆனால் புதுமைப்பித்தனைப் பல தடவைகள் அவர் வீட்டுக்குப் போய் பார்க்க நேரிட்டது. அதற்கான காரணமே வேறு. கிராம ஊழியன் மலருக்குக் கதை கேட்பதற்காகத் திருலோகமும் நானும் புதுமைப்பித்தனைத் தேடிப் போனோம் ஒருநாள் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வீட்டில் அவர் மனைவியோடு குடியிருந்தார். ரோட்டடி வீடு. திருலோகம் அவரிடம் என்னைப் பற்றிச் சொன்னார். ‘ஓ, நான் இவர் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்’ என்றார் அவர். மலருக்குக் கதை கேட்டார் திருலோகம் கதையோ அல்லது வேறு எதுவோ எழுதி அனுப்புகிறேன் என்று புதுமைப்பித்தன்