பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 1.31 திருச்சியில் சிவாஜி என்றொரு வாரப்பத்திரிகை நடந்து கொண்டிருந்தது. வணிக சமூகத்துடன் தொடர்புடைய சிவஞானம் என்பவர் அதன் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் இருந்தார். சொந்த அச்சுக்கூடமும் வைத்திருந்தார். சிவாஜி ரொம்ப சாதாரண இதழாக, திருச்சிவட்டார வணிக உலகச் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கொண்டதாக, வந்து கொண்டிருந்தது. திருலோக சீதாராம் சிவஞானத்துடன் பேசி, சிவாஜியைக் கவனிப்புக்கு உரிய எல்லோரும் மதிக்கக்கூடிய பத்திரிகையாக மாற்றிவிடலாம். அதன் வளர்ச்சி காரணமாக விளம்பர வருமானமும் கிடைக்கும் என்று கூறி அவருக்கு நம்பிக்கை ஊட்டினார். சிவாஜி இதழ், அச்சகம் இரண்டிலும் கூட்டாளியாகச் சேர்ந்தார். உழைக்கும் பங்காளியாகப் பொறுப்பேற்ற திருலோகம் தீவிரமுயற்சிகள் செய்து, சிவாஜியை விரைவிலேயே வளர்ச்சிப்பாதையில் முன்னேறும்படி செய்தார். அதிகமான பக்கங்களுடன் வெளிவரத்தொடங்கிய சிவாஜியில் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் எழுதினார்கள். என்னுடைய எழுத்துக்களும், கதை கட்டுரை, புதிய பகுதி, கேள்வி- பதில் என்று வாரம்தோறும் சிவாஜியில் இடம் பெற்றன. சிவாஜிக்கு மேலும் பெருமை சேர்க்கவும், விளம்பர வருமானம் பெறுவதற்காகவும், சீதாராம் ஆண்டுமலர் வெளியிட்டார். ஆண்டுதோறும் மலர் வெளியிடுவதை ஒரு முக்கியப் பணிஆக்கிக் கொண்டார் அவர் சிவாஜி ஆண்டுமலர்கள் தரமான தயாரிப்புகளாக அமைந்திருந்தன. வழுவழு தாள்கள், பளபளச் சித்திரங்கள், கவர்ச்சி அம்சங்கள் எதுவுமில்லாது, பெயர்பெற்றிருந்த எழுத்தாளர்கள் பெரும்பாலரது தரமான - நயமான படைப்புகளை மிகுதியாகக் கொண்டிருந்தன. அவை. இலக்கியவாதிகள் ரசிகர்கள் முதலானோரின் கவனிப்புக்கும் பேச்சுக்கும் உரியனவாக சிவாஜிமலர்கள் விளங்கின. திருலோகம் கூட்டுச் சேர்ந்த பிறகு, சில மாதங்களிலேயே சிவஞானம் பத்திரிகை அச்சகம் ஆகியவற்றின் முழுப் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்துவிட்டு விலகிக்கொண்டார். அதனால் திருலோகம் சிவாஜி யின் சொந்தக்காரர். ஆனார். அவருடைய ஆர்வம், உழைப்பு, ஆற்றல் எல்லாம் சேர்ந்து சிவாஜியை வெற்றிகரமாக முன்னடத்திச் சென்றன. சிவாஜி சீதாராம் என்ற பெருமையும் அவரை வந்தடைந்தது.