பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 & நிலைபெற்ற நினைவுகள் மாறிவிட்டன. இந்த நிலையில் நான் உங்களை சென்னைக்கு அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் சென்னையிலேயே தான் இருப்பேன். நவசக்தி சென்னையிலிருந்து தான் வெளியாகும். ஒண்டியண்டி குண்டு விட்டு உயிர்பறித்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! கொஞ்சம் காலம் திருநெல்வேலியிலேயே தங்கியிருங்கள். கவலைப்பட வேண்டாம். காலம் வரட்டும் என்று அவர் எழுதியிருந்தார். எனக்கு விசித்திரமான ஒரு எண்ணமும் ஏற்பட்டிருந்தது. மேல்நாடுகளில் நாடகங்கள் எழுதிப் பெயர் பெற்ற சில எழுத்தாளர்கள் தொழில் முறை நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து, அவர்களுடன் தங்கியிருந்து, அனுபவம் பெற்று, நல்லமுறையில் நாடகங்கள் எழுதினார்கள் என்று நான் படித்திருந்தேன். அதே மாதிரி நானும் தேர்ந்த ஒரு நாடகக் குழுவுடன் இணைந்து பயிற்சி பெற்று அனுபவபூர்வமாக நாடகங்கள் எழுதலாமே என்று நினைத்தேன். அதனால் என் விருப்பத்தைத் தெரிவித்து, 'முத்தமிழ் கலா வித்வ ரத்ன டி.கே. எஸ். நாடக சபா' வின் டி.கே. சண்முகத்துக்கு கடிதம் எழுதினேன். கலைஞர் டி.கே. சண்முகம் உடனடியாக பதில் எழுதியிருந்தார். உங்கள் விருப்பம் எங்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது. ஆயினும், உங்களைப் போன்ற திறமையுள்ள ஒரு எழுத்தாளரை எங்கள் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டு என்ன முறையில் வேலை கொடுப்பது என்று எங்களுக்குப் புரியவில்லை. உங்கள் விருப்பத்தை ஏற்று உங்களுக்கு உதவ முடியாமல் இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று சண்முகம் அறிவித்திருந்தார். காலம் வரும் என்று காத்திருப்பது தவிர வேறு வழியில்லை என்றாயிற்று. கிடைத்திருந்த சர்க்கார் வேலையை விட்டுப்போட்டு, சும்மா வீட்டோடு இருந்து வெட்டிப் பொழுது போக்குகிறானே என்று உறவினரில் சிலர் குறை கூறினார்கள். இனிமேல் என்ன பண்ணப்போகிறானாம் என்று அநேகர் முணுமுணுத்தார்கள். இந்த எண்ணம் என் அம்மாவுக்கும் இருந்தது. படித்தும் புத்திகெட்டுப் போன பிள்ளை என்ற மனவருத்தம் அம்மாவுக்கு ஆனால் என் அண்ணா கோமதிநாயகம் வருத்தப்படவுமில்லை; குறைகூறவுமில்லை. எனது எழுத்து முயற்சிகளைப் படித்து ரசித்தார். பத்திரிகைகளில் என் கதைகள் வந்ததனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கத் தவறவுமில்லை.