பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் : 43 நான் ஒதுங்கி ஒரமாக நின்றேன். கூட்டத்தில் நடந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் இயல்புப்படி தங்கள் கருமமே கண்ணாக, மெளனமாக நடந்து போனார்கள். வெளிச்சம் நகர்ந்து சென்றதும், நான் இருட்டில் விருதுநகர் நோக்கி நடந்தேன். இரவில் வெகுநேரமான பிறகும் மனிதர்கள் மயானத்தை நோக்கிப் போகிறார்களே என்ற எண்ணம் என்னுள் ஊர்ந்தது. விருதுநகர் இன்னும் விழித்திருந்தது. கடை வீதி வெளிச்சமயமாக விளங்கியது. கடைகள் திறந்திருந்தன. வண்டிகளும் ஆட்களும் இயங்கி, வியாபாரம் நடப்பதைப் புலப்படுத்தின. பெரும்பாலான கடைகளில் மின்விளக்குகள் இல்லை. உயரே இருந்து நீண்டு தொங்கிய கனத்த பித்தளைச் சங்கிலிகளில் பெரிய பித்தளை விளக்குகள் வெளிச்சம் தந்தன. எண்ணெயில் எரியும் திரிகளின் சுடரொளி போதுமான வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஒரு கடையின் சுவரில் காட்சி தந்த பெரிய கடியாரம் மணி 12 என்று சுட்டியது. நடுநிசி- நள்ளிரவு; நகரம் இன்னும் விழிப்புடன் பணம் பண்ணிக் கொண்டிருக்கிறது என்று என்மனம் அதிசயித்தது. தெருக்குழாய்களில் குடிதண்ணிர் தாராளமாக வந்து கொண்டிருந்தது. நான் முகம் கழுவி, வாய் கொப்பளித்து, வேண்டிய மட்டும் தண்ணிர் குடித்தேன். நடந்தேன். நகரின் ஒளிப்புள்ளிகள் மங்கி மறைந்தன. இருள் கவிந்த ரஸ்தா நீண்டு கிடந்தது. வானத்து நட்சத்திரங்கள் தான் துணை வந்தன. கள்ளிக்குடி வந்தது. ஊர் என்று சொல்லும்படியாக அங்கு அதிகமான குடிசைகளோ வீடுகளோ தென்படவில்லை. சில கடைகள் இருந்தன. தூங்காமல் ஆட்கள் அங்கு இருந்தார்கள். அங்கே விடிந்தால் சந்தை கூடும் என்று தோன்றியது. கூண்டு வண்டிகள் வந்திருந்தன. சரக்குகளோடு அவை அவிழ்க்கப்பட்டு நின்றன. மாடுகள் வண்டிகளின் அருகில் நின்று தீவனம் தின்று கொண்டிருந்தன. கிராம ஆட்கள் நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் பலநிலைகளில் காட்சி தந்தார்கள். சிறுசிறு கடைகளில் சிம்னி விளக்குகள் வெளிச்சமிட்டபடி இருந்தன. நானும் இங்கு சற்று நேரம் படுக்கலாமே என்ற நினைப்பு எனக்கு ஏற்பட்டது. சிறிது தள்ளிப்போய், வண்டிகளோ ஆட்களோ இல்லாத இடத்தில் படுத்தேன். தூக்கம்தான்.