பக்கம்:பச்சைக்கனவு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 C லா. ச, ராமாமிருதம்

பிரகாசித்தன. இத்தனை நாள் பழகியும், இந்த வசீகரம் ஏன் இதுவரை புலப்படவில்லை? அதற்கு வெளிப்பட சமயம் சந்தர்ப்பம் இடம் எல்லாம் வேணும் போலும்! ஆபீசில் எல்லோரும் ஒரே யந்திரமாய் நகருகையில் என்ன தெரிகிறது? கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய், உணர்விருந்தும் கட்டையாய்... புன்னகை யுடன் நோட்டுப் புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். அதில் ஏதோ எழுதி இருந்தது.

"நீங்கள்தானே நேற்று என்னைக் கட்டிலில் எடுத்துப் போட்டீர்கள்?’’

அதைப் படித்ததும் அவனுக்கு அதிர்ச்சி கண்டது. ஏன் தெரியவில்லை. வாய் வார்த்தையாக அவள் கேட்டிருந்தால் கூட கேள்விக்கு அவ்வளவு வேகம் இருந்திருக்குமோ? ஆனால் எழுத்துப் பூர்வமாக அக்கேள்வி அவனை எட்டிப் பார்த்ததும் அது பல பூட்டுக்களின் ஒரு சாவி போல், பல கேள்விகளின் ஓர் உருவாய்த் திகழ்ந்தது. திடீரென்று அவனை சாட்சிக் கூண்டில் ஏற்றியது போல் ஒரு பயம் உண்டாயிற்று.

அவ்வினா நன்றி அறிவித்ததா? அல்லது கண்டித்ததா? அல்லது அவளை அவன் தொட்ட உரிமையை அறிய முயன்றதா? அல்லது அந்தக் காரியத்தின் சரிதத்தை ஆராய முனைந்ததா? இத்தனை அர்த்தங்களும், இதற்கப்பாலும், மனம் கண்டும் காணாதும் உணரும் கேள்விகளும் அவைகளுக்குப் பதில்களும் தன்னுள் அடக்கிய வினா.

அவனுள் கிளர்ந்த எழுச்சியை மடக்கவோ, தனக்குத் தானே அறிந்து கொள்ளக்கூட அவன் அறிவும் பலமும் பயன் அற்றுப்போயிற்று அவனையே தகர்த்துக்கொண்டு அவனுள் புரண்ட புரட்சி அவனுக்கே பயங்கரமாக இருந்தது. ஆயினும் அவனால் செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. இந்த வெள்ளத்துக்குமப்பால் உள்ளம் புலருவது போல் இன்னொரு உணர்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/167&oldid=590825" இலிருந்து மீள்விக்கப்பட்டது