பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தையின் எடை 3.5 கிலோவுக்கு மேல் இருந்தால் தாய், தந்தைக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதனை செய்ய வேண்டும். அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.

கர்ப்பம் ஊர்ஜிதமானது முதலே, மருத்துவர் பரிந்துரைக்கும் இரும்புச் சத்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிடுவதால், குழந்தை கருப்பாக பிறக்கும் என்று நினைப்பது தவறு. கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்காக, எப்போதும் சாப்பிடுவதைப் போல, இரண்டு மடங்கு சாப்பிட வேண்டும்.

தாய்க்குத் தடுப்பூசி: முதல் பிரசவமாக இருந்தால், ரண ஜன்னி தடுப்பூசியைத் தாய்க்கு, இரண்டு முறை போடவேண்டும். கர்ப்பம் ஊர்ஜிதமாகி, ஒரு மாதத்துக்குள் முதல் தடவையும், 7-வது மாதத்துக்குள் இரண்டாவது தடவையும், தடுப்பூசி பொடுவது அவசியம். இரண்டாவது குழந்தையாக இருந்தால், கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன், ஒரு முறை ரண ஜன்னி தடுப்பூசி போட்டால் போதுமானது.

பிரசவ கால இறப்பைத் தடுப்பது எப்படி? : பிரசவத்தின்போது தாய் இறப்பதற்கு, ரத்தப் போக்கே மிக முக்கியக் காரணமாக உள்ளது தமிழகத்தில், 1000 கர்ப்பிணிகளுக்கு, இரண்டு பேர் என்ற அளவில், பிரசவகால இறப்பு விகிதம் உள்ளது. தாயின் ரத்தப் பிரிவைச் சேர்ந்த உறவினர்களைப் பிரசவம் நெருங்கும் போது, அருகில் வைத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில், ரத்தப் போக்கு ஏற்படும்போது, உடனடியாக உறவினர்களின், ரத்தத்தைப் பெற்று, ஏற்றி தாயைக் காப்பாற்றி விடலாம்.