பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

161

ஏனெனில் வேறு இடத்தில் இருக்கும் விரையின் வளர்ச்சியும், செயல்பாடும் பாதிக்கப்படும். 20-30வது வயதில் புற்றுநோயும் ஏற்படலாம். இரு புறமும் பாதிக்கப்பட்டால், மலட்டுத் தன்மை உண்டாகவும் வாய்ப்பு உண்டு. எனவே, குழந்தைக்கு விரைப் பைகளில் விதைகள் இல்லையெனில், அறுவைசிகிச்சை நிபுணரை உடனடியாகச் சந்தித்து ஆலோசனை கேட்பது அவசியமாகும்.

‘டான்சில்’ பிரச்சினை : தண்ணீர், காற்று, உணவு வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைத் தடுக்க, தொண்டையில் உள்ள சதை உதவுகிறது. கிருமிகள் நுரையீரலுக்குள் சென்றுவிடாமல் இச் சதை தடுக்கிறது. நோயை எதிர்க்கும் லட்சக்கணக்கான வெள்ளை அணுக்கள், இச்சதையில் உள்ளன. நான்கு வயது வரை இத் தொண்டைச் சதை, ஒரு அரண் போல் பாதுகாப்பு அளிக்கிறது.

3 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் பெரும்பாலும், இத் தொண்டைச் சதையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. ஒத்துக் கொள்ளாத ஐஸ்கிரீம், குளிர்பானங்களைக் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால், சளி, காய்ச்சல் அடிக்கடி வந்து, தொண்டைச் சதையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. நோய்த் தொற்று தீவிரமாகும் நிலையில், காதுக்குப் பரவாமல் தடுப்பதைத் தவிர்க்க, அறுவைசிகிச்சை செய்து, தொண்டைச் சதையை அகற்றி விடுவதே நல்லது.