பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

69

குழந்தையின் எடை ஆறுமாதத்தில், பிறந்த பொழுது இருந்த எடைபோல் இரண்டு மடங்காகவும், ஓர் ஆண்டில் மூன்று மடங்காகவும் ஆகுமானால், குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் கருதலாம்.

தாயிடம் பால் சுரப்பு மெதுவாக நடைபெறுமாயின், நாள்தோறும் இரண்டு மூன்று தடவை தனங்களைக் குளிர்ந்த நீராலும், சுடுநீராலும், மாறி மாறிக் கழுவவும், மெதுவாகப் பிடித்து விடவும் (Massage) வேண்டும். தனங்களில் பால் அதிகமாகச் சுரக்குமாயின், ஒரு பகுதியைப் பீச்சி எடுத்துவிட வேண்டும், அல்லது நீர் குடிப்பதைத் குறைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை நலமாகவும், பலமாகவுமிருந்தால், 4 மணிக்கு ஒரு தடவை வீதம் பால் கொடுத்தலே நல்லது. அப்படிச் செய்தால், நல்ல பசி உண்டாகும். நீண்ட நேரம் உறங்கும். தனங்களில் நன்றாக உறிஞ்சிக் குடிக்கும்.

குழந்தை பலமில்லாததாக இருப்பின், மூன்று மணிக்கு ஒரு தடவை விதம் பால் கொடுப்பதே நல்லது.அப்போதுதான் அது நலம்பெற ஏதுவாகும். நான்காவது தினங்களில் 4 மணிக்கு ஒரு தடவை வீதம் மாற்றவேண்டும். 4 மணிக்கு ஒரு தடவை வீதம் கொடுப்பதாயின் காலை 6 மணி, 10 மணி, 2 மணி, மாலை 6 மணி, இரவு 10 மணி ஆகிய 5 தடவைகளில் கொடுக்க வேண்டும். மூன்று மணிக்கு ஒரு தடவையோ, நான்கு மணிக்கு ஒரு தடவையோ, எதுவாயினும், பால் கொடுக்கத் தொடங்குவது காலை 6 மணி, முடிப்பது இரவு 10 மணி.

எத்தனை மணிக்கு ஒரு தடவை கொடுக்க முடிவு செய்யப்படுகிறதோ, அதன்படியே நடக்க வேண்டும். சிறிதும் ஒழுங்கு தவறலாகாது. அப்படியானால்தான் பாலும் தனத்தில் தயாராகச் சுரந்து நிற்கும் : குழந்தையும் பாலை சீரணிக்கத் தக்க நிலையில் இருக்கும்.