பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பாப்பா முதல் பாட்டி வரை

பிறந்தபோது வெயிற்காலமாயின், குழந்தைக்கு அதிகமான துணிகளைப் போர்த்தி, அதிக வெப்பமடையச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், இசிவு (Convulsion) ஏற்படலாம்.

குழந்தையின் மலம் கருப்பச்சை நீர் போலிருக்கும். உணவு உண்ணத் தொடங்கிய பின்னரே அது பழுப்பு நிறமாகவும் கட்டியாகவும் ஆகும்.

குழந்தை பிறந்ததும் கொப்பூழ்க் கொடியில் ஒரு பகுதி குழந்தையிடமிருக்குமாறு விட்டு விட்டு, அறுத்து மருந்து வைத்துக் கட்டுவர். எஞ்சியுள்ள பகுதி, சாதாரணமாக ஒரு வாரத்தில் சுருங்கிப் பின் விழுந்துவிடும். பிறந்த குழந்தையைப் படுக்க வைத்தால், முதிர்ந்தவர்போல் காலை நீட்டிப் படுக்க அதனால் முடியாது. அது தலையை ஒரு பக்கமாகத் திருப்பியும், கால்களை மடக்கியும், கைகளைக் கழுத்தினிடையே வைத்துக் கொண்டும் படுக்கும். அதாவது தாயின் கருப்பையில் இருந்த நிலையிலேயே இருந்துகொள்கிறது.

குழந்தை பிறந்த பின் சில வாரங்கள் வரை, பெரும்பகுதியான நேரம் உறங்கிக் கொண்டே இருக்கும். விழித்திருக்கும் பொழுதில் இடைவிடாமல் கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கும்.

குழந்தையின் எலும்புகள் மிருதுவாகவும் வளையக் கூடியனவாகவும் இருக்கும். மண்டையோட்டுப் பகுதிகள் இணைந்த இடத்தில், ஆறிடங்கள் மிருதுவாக இருக்கும். அதனால் அவற்றுக்கு ஊறு ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ளவேண்டும்.

குழந்தையின் உச்சித் தலையில், இரண்டிடங்களில் தொட்டால், அதிக மிருதுவாயிருக்கும். அவற்றில் (Soft spots) ஒன்று பெரிதாயும், ஒன்று சிறியதாயுமிருக்கும்.