பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


சூழ்வரியுள் கண்ணகியைக் கோவலனது வெட்டுண்ட உடல் மேல்தழுவவைத்துப் புலம்பச் செய்து ஓல இசை இசைத்தார்.

குன்றக் குரவையுள் குறவர் முருகனைப் பரவ வைத்து அவர் வழியே பராவி இசைத்தார். நீர்ப்படைக்காதையில் சேர அரசி வேண்மாளைக் கேட்கவைத்துக் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், என்னும் நால் வகைப் பண்ணையும் அவ்வக்குமுகாய மக்கள் வழி இசைத்தார். நடுகற் காதையில் வீரரது போர்ப்புண்ணின் நோவு நீர அகவன் மகளிரை யாழ் மீட்டிப் பாடவைத்து இசைத்தார். இதனால், இசை, நோவைத் தீர்க்கும் மருந்தெனக் காட்டினார். வாழ்த்துக் காதையில் தேவந்தி முதலியோரை அரற்றிப் புலம்பச் செய்து ஓல இசை இசைத்தார். மகளிரை அம்மானை பந்து முதலியனை ஆடும்போது பாடவைத்து ஆடலிசை இசைத்தார்.

இவ்வாறு, நூல் முழுமையும் இசையை ஊடுபாவாக ஓடவைத்து இசைத்ததைப் பாரதியார் நோக்கினார். அந்நோக்காலே “சிலம்பை இசைத்ததும்” என்று பாடினார்.

சிலம்பில் இளங்கோவின் இயற்றமிழ்ப் புலமையையும் இசைத்தமிழ் புலமையையும் இரு சொற்களால் குறித்தவர் அவரதுகூத்துத்தமிழ் அஃதாவது நாடகத்தமிழ்ப் புலமையைக் காணாது விடுவரோ? கண்டார்; சிலம்பில் பலவகையான வாய்ப்புள்ள இடங்களிளெல்லாம் இளங்கோவடிகள் கூத்தை அமைத்துள்ளதைக் கண்டார்.

மன்னர் முன்னர் ஆடும் வேத்தியல் கூத்து; மக்கள் முன்னர் ஆடும் பொதுவியல் கூத்து; தெய்வ நிலையில்

25