பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


நின்று ஆடும் கூத்து; மக்கள் தன்மையில் நின்று ஆடும் கூத்து; தனித்து நின்று ஆடும் கூத்து; சில எண்ணிக்கையினர் கூடியும், குமுகாயத்தினராகக் குழுமியும் ஆடும் கூத்து. அகப்பொருளை அமைத்தாடும் கூத்து; புறப்பொருளை அமைத்தாடும் கூத்து; தமிழ் இனத்தார் ஆடும் கூத்து; பிற இனத்தார் ஆடும் கூத்து. இவ்வாறு பலமுனைக் கூத்துகளும் சிலம்பில் அமைத்துள்ளதைப் பாரதியார் கண்டார். அவற்றின் விளக்கத்தையும் கண்டார்.

அரங்கேற்று காதையில் கூத்தின் முழு இலக்கணமும், இலக்கியமும் அமைந்துள்ளன. ஆடல் ஆசிரியனாம் நட்டுவனின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் வாயிலாகக் கூத்தின் அடிப்படை குறிக்கப்பட்டுள்ளது. ஆடும் அரங்கம், மேடையின் அமைப்பு வியக்கத்தகும் வண்ணம் சுட்டப்பட்டுள்ளது. ஆடலும் பாடலும் அழகும் நிறைந்த கலையரசி மாதவியைச் சோழ மன்னன் திருமுன் அரங்கேற்றி ஆடவைத்துக் கூத்தின் இலக்கியத்தை மிளிர வைத்துள்ளார்.

மன்னன்முன் ஆடியவளை அடுத்து மக்கள்முன் ஆட வைத்துள்ளார். கடலாடு கதையில் இந்திரவிழாக்கான வந்தோர் யாவரும் காணுமாறு பதினோராடலை மாதவியை ஆடவைத்து விளக்குகிறார். இவை பதினொன்றும் தெய்வ நிலையில் நின்று ஆடப்படுவன. அவற்றுள் ஆண்பால் தெய்வங்களுக்கு உரியன ஆறு; பெண்பால் தெய்வங்களுக்கு உரியன நான்கு; இருபாலும் ஒன்றிய அம்மையப்பர் வடிவத்துக்கு உரியது ஒன்று. இவ்வாறு தெய்வங்களையும் ஆடவைத்துள்ளார்.

மன்னனது அவையிலும், மக்களது அம்பலத்திலும் ஆட வைத்தவர் வீட்டுஅறையிலும் மாதவியை ஆடவைத்துள்ளார்.

26