பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


“அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்துகொள்ளும் நல்லறிவு’’ (வேண்டுகிறேன்)

- என்று குறிக்கும் அவரது குறிப்பை நுணுகி நோக்கி உணரவேண்டும்.

தம் அறிவுப் பார்வையில் படுகின்றவற்றின் உள்ளீட்டை, பார்வை பட்ட அளவிலேயே உணரும் திறன் வாய்ந்தவர் பாரதியார் என்பதை அவரது கவிதைகளாலும் உணரலாம்.

இத்திறன் உடையோர் ஆன்றோராவர். பாரதியார் ஆன்றோர் குழுவில் ஒளிவிட்டுத் திகழ்பவர்.

ஆன்றோர்கள் கருத்துக் கருவூலங்கள்; அரும்பொருள் பெட்டகங்கள் எங்கெங்கோ, எவ்வெப்பொழுதோ பெற்ற நுண்மாண் பொருள்கள் அவர்தம் உள்ளத்தே முறையாக அமைந்திருக்கும். அவர்களது இயற்கையான மதிநுட்பத்தால் அவை உரிய காலத்தே, உரிய அளவில், உரிய முறையில் வெளிப்படும். ஒன்றைப் படைக்குங்கால் எளிதாகக் கைப்போக்கில் படைப்பர். அப்படைப்பில் திட்டமிட்டும், வரையறுத்தும், முறைகருதியும் அமைத்தது போன்று சொற்களும் கருத்துகளும் அமைந்துவிடும்.

அப்படைப்புகளை அவர்களே திரும்ப நோக்கும்போது வியப்பர். அவ்வியத்தகு வித்தகம் பாரதியாரிடத்தும் அமைந்துள்ளது. இவ்வித்தகம் அவர்க்குக் கைவந்த கலை

41