பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


லும் இணைந்து நின்று ஒத்துழைத்துள்ளது. இவை கொண்டுதான் இக்குழந்தை வடிவை வடித்த சிலைக் கலைஞன் தூக்க நிழலைக் கண்களில் தூவிவைத்துள்ளான், - என்றுமுடித்தான், கூர்ந்துநோக்கிய ஒரு சிலைக்கலைஞன்.

ஆம், அஃது ஒரு சிலை. அதிலும் பளிங்குக் கல்லால் ஆக்கப்பட்ட சிலையே. சென்னை அடையாற்றங்கரையில் ‘கலை நிலைய’த்துச் சோலைக் கூடத்தில் உள்ள ஒரு சிலை அது. காண்போரை அவரவரது தன்மைக்கேற்ப இளக வைப்பதாக அது அமைந்திருந்தது.

சிலைக் கலையின் உயிரோட்டத்தில் பழகிய ஒரு கலைஞன் அதை வடித்தான். சிலைக்கலையின் நாடித்துடிப்பறிந்த ஒருகலைஞன் அதனைக் கலைப்பாங்கோடு உணர்ந்து நோட்டம் கூறினான். ஏனையோர் சுவைக்கத்தான் முடித்தது; உள்ளத்தை அள்ளிக் கொடுக்கத்தான் முடிந்தது.

ஒரு சிலைக் கலைஞனால்தான் முந்தையச் சிலைக் கலைஞனின் உள்ளத்தைத் தொட்டுப்பார்த்து, உணர்ந்து, உண்மையான நோட்டங் கூற முடியும். இஃது எல்லா வகைக்கும் பொருந்தக் கூடியதே.

தாய்மையைத் தாய்மையால்தான் உணர்ந்திடமுடியும். பருவத் துடிப்பின் ஆழத்தைச் சிறுவர் சிறுமியரோ காண்பர்? இசை நுணுக்கத்தை இசை நுண் கலைஞனால்தான் ஓர்ந்து கொள்ளமுடியும். அன்றிற் பேடையின் முணகலுக்கு அன்றிற் போத்துத்தானே பொருள் கூறும்? இவையொப்ப ஒரு கவிஞனின் இலக்கியப் படைப்பின் நுண்மையை மற்றொரு கவிஞனால்தான் தெளிவாகப் படம் பிடிக்கமுடியும். இஃது அத்துணைக்கத்துணை பேருண்மை.

3