பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புண்ணியம் ஆம் பாவம்போம்!

அவற்றைச் சுவையாக, இனிமையாக, அழகாக எடுத்துச் சொன்னால் கவனிப்பு அதிகம் கிட்டும் என்று உணர்ந்தார் பெரும் பக்தர். அவ்விதமே செய்தார்.

இளைஞர்களும் உணர்வுக் கிளுகிளுப்பு உடையோரும் அவரைச் சுற்றித் திரிந்தார்கள். சரித்திரம், காவியம், கலை எல்லாம் காம மினுமினுப்போடு அங்கே கூத்திடலாயின.

இவர் தலைவர். இவர் கடவுள். இவர் வழிகாட்டி’ என்றார்கள் புதிய அடியார்கள்.

தனியான ஞானோதயமோ, பிறரின் உந்துதலோ, காலப் பாழில் கவனிப்பற்ற இடமாய் கிடந்த அந்தப் பகுதியிலே பெரும் பக்தர் தனிமடம் கண்டார். அவர் அடியார்களும் அங்கே வந்து சேர்ந்தனர். இவர் தலைவர்; இவர் கடவுள்; இவர் வழிகாட்டி என்ற புகழ்மொழி ஓயாது அர்ச்சிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் கவனிப்பற்றுக் கிடந்த அந்தப் பெருவெளியில் பழமை இருள் விலகி, புதிய மேகங்கள் சூழ்ந்தன. நச்சுச் செடி கொடிகள் குறைந்திருந்தன. ஆனால் புதிய காளான்களும், நாசக் கொடிகளும் பின்னிப் படர்ந்தன.

அவற்றின் மத்தியிலே, அவற்றின் பாதுகாப்போடு, புதிய வழிகாட்டியின் மடம் எடுப்பாகக் கொலுவிருந்தது.

அங்கு குழுமிய அடியார்களுள் ஒரு அடியார் மடத் தலைவரின் அன்புக்குரிய சீடர் ஆனார். ஆகவே, இவர் தலைவர். இவர் கடவுள்’ என்று ஓங்கிக் கூவி வந்தார் அவர். அவர்களைச் சுற்றி காமம் ஜிலு ஜிலு நாட்டியம் புரிந்தது. சிற்றின்பங்கள் சிங்காரமாய் கொலுவிருந்தன. வரலாறு, வாழ்வு, காவியம் எல்லாம் அவர்களுக்கு ஏவல் புரியலாயின. பக்தர்கள் பரிசுகள் கொடுத்தனர். கொடுக்காவிட்டால் கேட்டுப் பெறுவோம் என்று திட்டமிட்டார் இளம் அடிகளார்.