பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5

போலிருந்தது, பிரமைதான். புரையேறி, நாசித் துவாரம் வழியாக ஒரு பருக்கை வெளியே வந்தது. கண்களில் நீர்கட்டி, தொண்டையில் பசபசப்பு மிகுந்தது. சே தன் கையினால் மண்டையில் லேசாகத் தட்டிக் கொண்டு தண்ணீர் குடித்தான். உணவை எடுத்து மூடி வைத்து விட்டு உட்கார்ந்தான்.

புகை கக்கிக் கொண்டு செங்கொழுந்து பாம்பு நாக்குப் போல் நீண்டு உள்வாங்கிப் பின்மேல் நீண்டு நெளிந்தாட ஒளிச்சுடர் வளர்த்து நின்ற காடா விளக்கு அவன் நிழலை பூதாகாரமாகச் சுவரிலே சித்திரித்தது. சுடர் ஆட்டத்துக்கேற்ப நிழல் மங்கியும் இருண்டும் தெரிந்தது, உடலினின்று பிரிந்த ஆவி மாதிரி... ஆமாம். இயற்கை மரணம் எய்தினால் உயிர் என்னாகும்? இப்படி பலவந்தமாக உயிரைப் பிரிக்கும்போது, உயிர் என்னாகிறது? அவன் மனம் சுலபமாகக் கேள்வி கேட்டு விட்டது. பதில்? விடை காண முடியாது அவனைக் குழப்புகிற எண்ணற்ற புதிர்களோடு இன்னும் சில பிரச்னைகள்!...

இரவு ஊர்ந்து கொண்டிருந்தது.

அவன் தூங்கவில்லை. ஆனால் கிரக்கம் இமைகளை கனமாக்கி, மூடிச் சொருக வைத்தது. முடிவற்ற எண்ணம் தெளிவிலாச் சாயைகளைச் சித்த வெளியிலே நிழலாட விட்டது... அந்தக் குற்றவாளி செத்து அவனது உயிர் ஆவியாய், அடிமுடியற்ற பூதமாய், அமைதியில்லாப் பிசாசாகி சுத்த சூன்ய வெளியிலே சுழன்று, அவனைப் பழிவாங்க வந்து, அவன் கழுத்தை நெரிக்கிறது... அதன் எலும்புக் கைவிரல்கள் தூக்குக் கயிற்றின் முடிச்சு போல் காட்சி தருகின்றன... அவன் குரல்வளையில் அமுக்கி இறுக்குகின்றன. அவன் அலறியடித்து விழிக்கிறான். உடல் நடுங்குகிறது. சே, என்ன பயங்கரமான கனவு .