பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-வது அதிகாரம் சனிக்கிழமை - ஆறாவது வலை வெள்ளிக்கிழமை இரவில் மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகைக்குள்ளிருந்து தந்திரமாகத் தப்பித்துக்கொண்டு வெளியில் வந்த பூர்ணசந்திரோதயம் ராஜபாட்டையை அடைந்து சிறிது தூரம் நடக்க, அவளுக்கு எதிரில் ஒரு வாடகைக் குதிரை வண்டி ஓடிவந்தது. அந்த மடமயிலாள் அதை நிறுத்தி வாடகைக்கு அமர்த்தி அதற்குள் ஏறி உட்கார்ந்து கொள்ள, அரைக்கால் நாழிகையில், வண்டி கீழ் ராஜவீதியின் வழியாக ஒடி அரண்மனைத்தோட்டத்து திட்டி வாசலண்டை வந்து நின்றது. அவ்விடத்தில் இரண்டு பாராக்காரர்கள் நின்று காவல் காத்திருந்தனர். பூர்ணசந்திரோயம் உடனே வண்டியை விட்டுக் கீழே இறங்கி, ஒரு பக்கத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைத்திருக்கும்படி வண்டிக்காரனுக்கு உத்தரவு கொடுத்துவிட்டு, அங்கிருந்த பாராக்காரர்களிடம் நெருங்கி, 'சின்ன மகாராஜா உள்ளே இருக்கிறாரா?' என்ற கேட்க, அவர்கள் அவளது ஜாஜ்வல்லியமான அலங்காரத்தையும் மகா உன்னதமான கட்டழகையும், அற்புத தேஜசையும் கண்டு, அவள் இளவரசருடைய ஆசை நாயகிகளுள் ஒருத்தி என்றும் அவருடைய உத்தரவின்மேல் அவள் வந்திருக்க வேண்டும் என்றும் நிச்சயித்துக் கொண்டு மிகுந்த பயபக்தி மரியாதை களைக் காட்டிக் குனிந்து, 'அம் மணி மகாராஜா உள்ளே இருக்கிறார். ஏன்? தாங்கள் அங்கே போக வேண்டுமா?" என்றார்கள். பூர்ணசந்திரோதயம், 'ஆம் ' என்க, அவர்கள் உடனே திட்டி வாசலைத் திறந்தனர். ஒருவன் அந்தப் பூங்கோ தைக்கு வழிகாட்டி முன்னால் நடக்க, அவள் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றாள். அவர்களிருவரும் பற்பல சந்துப் பாதைகளையும் கூடங்களையும் மாடங்களையும்