பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

விருந்தாளி அங்கு வந்து சேர்ந்தான். தான் அசுத்தப் படுத்திய விரிப்புகளை நபிகள் நாயகம் துவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு நெக்குருகினான். திரும்பி வந்த விருந் தாளியைக் கண்ட அண்ணலார் ஆவலோடு ஒடிச் சென்று, வரவேற்று, அன்பு மொழி கூறி, மறந்து வைத்துவிட்டுச் சென்ற வாளை எடுத்து வந்து கொடுத்தார். அவன் உடல் நலனைப் பரிவோடு கேட்டார். துஷ்டனிடமும் அன்பும் பரிவும் காட்டும் நாயகத் திருமேனியின் மனித நேய நற்செயல் அவனை கண்ணீர்விடச் செய்தது.

குலங்களும்
கோத்திரங்களும்

மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உணர்வு காட்டுவது அறவே கூடாது. உலகத்து மக்கள் அனைவரும் ஆதாமின் வழிவந்த சகோதரர்களேயாவர். ஒருவரை யொருவர் இனம் காணவே குலங்களும் கோத்திரங்களும் உருவாயின. இதையே திருமறை, ‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரை விட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை’ (திருக்குர்ஆன் 49:13) எனக் கூறுகிறது. இறைவாக்குக்கேற்ப வாழ்ந்து வழிகாட்டிய மனிதப் புனிதரான பெருமானார் நாடு, இன, மொழி, நிறவேற்றுமைகளைக் கடந்து நிலையில் மனித நேயத்தோடும் சமத்துவ உணர்வோடும் செயல்பட்டவராவார். இதை முழுமையாக மெய்ப்பிக்கும் நிகழ்ச்சியொன்று பெருமானார் வாழ்வில் நிகழ்ந்ததைக் காண முடிகிறது.

பிலால்

மதினாவில் முதன் முதலாக இறைவணக்கமாகிய தொழுகைக்கென பள்ளிவாசல் ஒன்று உருவாக்கப்பட்டது.