பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

அப்போது, முதன்முதலாக தொழுகைக்கு அழைக்கும் ‘பாங்கு’ எனும் தொழுகை அழைப்புமுறை உருவாக்கப்பட்டது. இதை இனிய குரலால் கூவியழைக்க யாரை நியமிப்பது என்ற நிலை ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணியை மேற்கொள்ள நபித் தோழர்களில் பலரும் அவாவிய போதிலும் இனிய குரல் வளம் படைத்த பிலால் (ரலி) அவர்களையே பெருமானார் தேர்ந்தெடுத்தார். அபிசீனிய நாட்டைச் சேர்ந்த இக் கறுப்பர் அடிமையாக இருந்து, இஸ்லாத்தில் இணைந்து விடுதலை பெற்றவர். அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் இவரைத் தேர்வு செய்ததின் மூலம் மனித நேய உணர்வை வலுப்படுத்தினார்.

மக்கா வெற்றி பெற்றபோது பல ஆண்டுகளாகப் பெருமானாருக்கு எல்லாவகையிலும் பெருந் துன்பம் நல்கி வந்த மக்கா குறைஷிகள் பலரும் பெருந்தண்டனைகளை எதிர்நோக்கி நிலைகுலைந்து நின்றனர். ஆனால், அண்ணலாரோ அவர்களில் யாரையுமே தண்டிக்க விரும்பாமல் பொது மன்னிப்பளித்து தம் மனித நேயத்தை வெளிப் படுத்தி மகிழ்வு கொண்டார்.

இவ்வாறு, நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித நேயம் உள்பட உன்னத மனிதக் குணங்கள் அனைத்தும் ஒருருக்கொண்ட மனிதப் புனிதராக, மாநபியாக நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டிச் சென்றுள்ளார். பெருமானாரின் குணநலன்கள் ஒவ்வொன்றும் குணவொழுக்கமுடையவர்களாக நம்மை உருமாற்றும் உந்து சக்திகளாக அமைந்துள்ளன.

இன்றைய தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் காணக்கிடக்கும் குணவொழுக்கக் கேடுகள் மறைய, நற்குணங்கள் அனைத்தும் அரசோச்சும் நிறைவாழ்வு நிலை பெற பெருமானாரின் பெருவாழ்வு ஓர் அழகிய முன் மாதிரியாகும்.

நன்றி : தினமணி