பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வசதி படைத்தோரிடமிருந்து ஜகாத் வசூல் செய்து உரியோர்க்கு வழங்கி வருகிறது. இஸ்லாமிய அரசு இல்லா நாடுகளில், ஊர்தோறும் குழு அமைத்து ஜகாத் வசூல் செய்து, உரியோர்க்கு குழுவே கொடுத்து வருகிறது. இவ்வாறு செய்வதற்கு அரசமைப்புச் சட்டமோ அல்லது ஊர் அமைப்புகளோ எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. ஜமாத்தாகத் தொழும் கூட்டுத் தொழுகை போன்று ஜகாத் கடமையும் கூட்டாக நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் இறைநெறி வகுத்த ஜகாத் முறை உரிய முறையில் நிறைவேறி, கீழ்த்தட்டு மக்களின் வாழ்வில் மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கத் துணைபுரிகிறது.

ஃபித்ரா தருமம்

ஃபித்ரா எனும் தானத்தின்படி இப்புனித ரமளான் பெருநாளன்று தொழுகை நடத்த பள்ளிவாசல் செல்லு முன் 2 கிலோ கோதுமையை அல்லது அதற்குரிய தொகையை யாரேனும் ஏழை எளியோர்க்குத் தருமமாகத் தந்த பின்னரே பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டும். இதன் மூலம் பெருநாள் அன்று எல்லோரும் உண்டு களித்துக் கொண்டாட முடிகிறது. அத்தொழுகையே இறைவனால் மகிழ்ச்சியோடு ஏற்கப்படுகின்றது. இதனால்தான் ரமளான் பெருநாள் ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படுகிறது.

நன்றி: அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை.