பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

கொண்டுள்ள இந்தியாவைப் பற்றிய பெருமை உணர்வு எங்கே தகர்ந்து போகுமோ என்ற அச்ச உணர்வு நல்ல உள்ளங்களையெல்லாம் இன்று வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் தலையாய பண்பாகத் தொன்று தொட்டு இருந்து வருவது எந்தவொரு விஷயத்திலும் யார்? என்பதை விட என்ன? என்பதில் மட்டும் கருத்தைச் செலுத்தும் தகைமையே யாகும். இந்தியாவிலேயே இந்து, ஜைன, புத்த, சீக்கிய மதங்கள் உருவாகியிருந்த போதிலும், இந்தியாவுக்கு வெளியேயிருந்து வந்த கிருத்துவ, இஸ்லாமிய பார்ஸி சமயங்களையும் அவற்றின் மூலம் வந்த சமயத் தத்துவங்களையும் கலை, பண்பாடுகளையும் இருகரமேந்தி வரவேற்கத் தவறவில்லை. காலப் போக்கில் இவையெல்லாம் இந்தியச் சமயங்கள் என்ற உணர்வையும் மக்களிடையே உண்டாக்கின. இதுதான் இந்தியாவின் தனித்துவமாக உலக அறிஞர் பெருமக்களால் கணித்துப் போற்றப்படுகிறது. நல்ல சிந்தனைகள், சன்மார்க்க உணர்வுகள் எங்கிருந்து வந்தாலும் யாரால் கூறப்பட்டாலும், அவற்றை யெல்லாம் தனதாக்கிக் கொண்டு வலிமை பெறுவதுதான் இந்தியாவின் தனித்தன்மை எனத் தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூறியுள்ளனர். இதே உணர்வை இந்தியா ஆன்மீக மறு மலர்ச்சிக்கு அயராது உழைத்த விவேகானந்தரும் பலமுறை எடுத்தியம்பியுள்ளார்.

பெருமைமிகு பாரத நாடு பன்னெடுங்காலமாகக் கட்டிக்காத்து வளர்த்து வந்த இந்த உயரிய பண்பு, உலகத் துக்கே வழிகாட்டி வந்த மாண்பமைபோக்கு, இன்று குறுகிய உள்ளமுடைய, சுயநலவேட்கை மிக்க சிலரால், தடுமாற்றத்திற்காளாகக்கப்பட்டிருப்பதுதான் வேதனை தருகிறது.