பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

இஸ்லாமிய சமுதாய இளைய தலைமுறையினரிடையே இன்று புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய உணர்வோடு இஸ்லாமிய அறிவையும் பெருமளவில் பெற வேண்டும் என்ற வேட்கை எங்கும் மிகுந்ததுள்ளது. காலத்தின் போக்குக்கும் அதற்கேற்ப அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வு என்ன என்பதில் அறிவுலகம் பெருமளவு கருத்தூன்றி வருகிறது. அதிலும் குறிப்பாக, முஸ்லிமல்லாத பிற சமயச் சகோதரர்கள் இஸ்லாமியச் சிந்தனைகளை, தத்துவ நுட்பங்களை அறிந்து கொள்வதில் என்றுமில்லாத அளவுக்கு இப்போது ஆர்வம் மிக்கவர்களாக உள்ளதை என்னால் நன்கு உணர முடிகிறது. பத்திரிகையுலக நண்பர்கள் மட்டு மல்லாது, சாதாரணமானவர்களும் என்னிடம் அவ்வப்போது கேட்கும் கேள்விகளிலிருந்து இதை என்னால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை இத்தகைய விழிப்புணர்வை உண்டாக்கி வரும் பெருமையின் பெரும் பகுதி என தருமை பாரதீய சகோதரர்களையே சாரும்.

காலத்தின் தேவைக்கும், மக்களின் புரிந்துணர்வுக்கும் ஏற்ப இஸ்லாமியத் தத்துவக் கோட்பாடுகளை, நெறி முறைகளை எளிமைப்படுத்திக் கூற வேண்டும் என்பது என் நீண்ட நாளைய வேணவா. இஸ்லாத்தின் உண்மையான நெறிமுறைகளை பிற சமயத்தவர் சரிவர அறியாதது மட்டுமல்ல தவறாகப் புரிந்து கொண்டிருப்பதே இன்று எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் அமைந்துள்ளன என்பதையே கடந்த கால வரலாறும், அதன் போக்கில் நிகழ்ந்து விட்ட சம்பவங்களும் எண்பித்துள்ளன. இதற்கு முஸ்லிம்களும் ஒரு வகையில் பெருங் காரணமாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம், இஸ்லாத்தை உரிய முறையில் பிற சமயத்தவர் மத்தியில்