பக்கம்:பொன் விலங்கு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பொன் விலங்கு

கொள்வதற்கும், சாப்பிடுவதற்குமே உன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதி செலவாகி விடும். ஊரில் இங்கு உன்னை நம்பிக் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு நீ அதிகமாக ஒன்றும் அனுப்ப முடியாமல் போனாலும் போகலாம். உன் வீட்டு நிலைமை எனக்குத் தெரியுமாதலால் இதை நான் உன்னிடம் சொல்ல வேண்டியதாயிற்று. மற்றக் கல்லூரிகளைவிட மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சம்பள விகிதங்கள் நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். இருந்தாலும் நீ வெளியூரிலும், உன் வீட்டில் மற்றவர்கள் இங்குமாக வசிப்பதனால் இரட்டைச் செலவு தான் ஆகும் செலவையோ, வருமானத்தையோ, காரணமாக முன் நிறுத்திச் சொல்லுகிற யோசனைகளை நீ விரும்பமாட்டாய் என்று நான் அறிவேன். ஆனாலும் இதைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு சத்தியம்' என்றான் குமரப்பன்.

'உள்ளுரிலுள்ள கல்லூரிகளையெல்லாம் பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்னவென்று உனக்குத்தான் தெரியுமே குமரப்பன்? வாழ்க்கையிலுள்ள பெரிய வேதனை இந்த இடம்தான். நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் எங்கே எப்படி வாழ வேண்டுமென்று நம்மை எதிர்பார்க்கிறது என்பதும்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்."

"இப்படிச் சொல்வதால் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்ளாதே, சத்தியம்! உன்னுடைய குடும்பத்தின் வசதிக் குறைவுகளை நினைத்தே நான் இந்த யோசனையைச் சொன்னேன். நீ மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குப் போவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான மறுப்புமில்லை. நானும் அப்படி ஒரு நல்ல கல்லூரியில் நீ பணிபுரிவதைத்தான் எதிர்பார்க்கிறேன், வரவேற்கிறேன். அதே சமயத்தில் நடைமுறை உலகிலுள்ள துன்பங்களையும் நீ மறந்துபோய்விடக்கூடாது. மனிதனுடைய உயர்ந்த இலட்சியம் என்பது சில மலைகளின் பசுமையைப் போலத் தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் கவர்ச்சியாய்த் தோன்றி அருகில் நெருங்கியதும் ஒன்றுமில்லாததாய்ப் போய்விடுகிறது. உன்னைப் போன்ற சிந்தனைவளமோ, படிப்பின் ஆழமோ எனக்கு இல்லை. ஆனாலும் உலக அநுபவத்தை முன்வைத்து நான் சில யோசனைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/144&oldid=595089" இலிருந்து மீள்விக்கப்பட்டது