பக்கம்:பொன் விலங்கு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 143

உனக்குச் சொல்லுகிறேன். அவற்றை நீ அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை' என்று குமரப்பன் சொல்லியபோது அவனுடைய குரலில் எந்தவிதமான செயற்கை குறும்பும் இல்லை. உண்மையான அனுதாபமும் இரக்கமுமே அந்தக் குரலில் ஒலித்தன. இதன் பின்பும் அதே இடத்தில் நின்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி நாட்களில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி, உள்ளுர் அரசியல் நிலவரம் பற்றி, நிகழ்காலத் தமிழ் இலக்கியத்தின் நிலைபற்றி, விவாதமும் பேச்சுமாக நேரம் போவது தெரியாமல் வளர்ந்தது உரையாடல். இரயில் நிலையத்து மேற்பாலத்திலிருந்து புறப்பட்டுக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் டவுன் ஹால் ரோடு வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தபோது எதிரே கண்ணாயிரத்தின் கார் எங்கோ வேகமாகப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. கண்ணாயிரமும், கண்ணாயிரத்தின் காரும், அந்தக் கார் நிறைய வேறு யாராவது மனிதர்களும் போய்க்கொண்டிருந்தால் சத்தியமூர்த்தியோ குமரப்பனோ அப்போது கவலைப்பட்டிருக்கப் போவதில்லை. கண்ணாயிரத்தின் கார் மதுரை மாநகரத்தில், உள்ள மிகமிகப் புராதனமான பொருள்களில் ஒன்று. நான்கு டயர்களின் நடுவிலும் குச்சி குச்சியாகக் கம்பிகள் சிலிர்த்துக்கொண்டு பார்ப்பதற்குக் காச நோயாளி போல் காட்சியளிக்கும் அந்தக் காரை இலட்சம் கார்களுக்கு நடுவிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடலாம். வேறு செளகரியமான கார் வைத்துக் கொள்ள வசதியோ, வளமோ இல்லாததால் கண்ணாயிரம் இதை வைத்துக்கொண்டிருந்தார் என்று சொல்லிவிடுவதற்கு இல்லை. அவருக்கு ஒரு பிரமை உண்டு. இந்தக் காருக்கும் தமக்கும் ஏதோ ஒர் இராசி இருப்பதாகவும் இதில் புறப்பட்டுப் போனால்தான் தம்முடைய காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று நம்பி இந்த பழைய காரிலேயே பணத்தைக் கொட்டி செலவு செய்து புதுப்புது வசதிகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். இந்த விதமான திருக்கோலத்தோடு கண்ணாயிரத்தின் கார் டவுன் ஹால் சாலையில் அவர்களுக்கு எதிரே வந்தபோது அதைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில்லாமல் தானாகவே அவர்கள் கண்களில் தனக்கேயுரிய முக்கியத்துவத்தோடு அது தென்பட்டு வைத்தது. கண்ணாயிரம்தான் காரை ஒட்டிக் கொண்டு சென்றார். அவருக்கருகே முன்ஸிட்டில் தன் தந்தை அமர்ந்திருந்ததைக் கண்டுதான் சத்தியமூர்த்தி அப்போது வியப்படைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/145&oldid=595091" இலிருந்து மீள்விக்கப்பட்டது