பக்கம்:பொன் விலங்கு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பொன் விலங்கு

புறப்பட்டுப் போகவே பிடிக்காமல் வீட்டின் தனிமையில் புத்தகங்களை நாடி மன அமைதி பெற முயன்றான் அவன். அவன் கண்ணாயிரத்தைப் பார்க்காமலே தட்டிக் கழித்தது பிடிக்காததனால் தந்தை அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். அம்மாதான் அவன் மனமறிந்து ஆறுதலாக அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள்.

"வருத்தப்படாதே சத்தியம்! உனக்கென்று எப்படியும் ஒரு வேலை காத்துக்கொண்டுதான் இருக்கும். இல்லாததையெல்லாம் நினைத்துநீயாக மனத்தைக்கெடுத்துக்கொள்ளாதே.நிம்மதியாயிரு' என்று அவன் முகமும் மனமும் வாடுவதைப் பொறுக்க முடியாமல் அம்மா ஆறுதல் கூறும் வேளையில் அவனுக்குச்சிறிது மனஅமைதி கிடைக்கும்.

சித்ரா பெளர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. "பூபதிக்கு இன்னொரு கடிதம் எழுதலாமா அல்லது ஒரேயடியாக மல்லிகைப் பந்தலை மறந்துவிட்டு வேறு கல்லூரிகளுக்கு முயற்சி செய்யலாமா? என்று அவன் தயங்கிக் கொண்டிருந்தபோது அந்த நல்ல செய்தி வந்து சேர்ந்தது. அவ்வளவு நாட்கள் அவனைக் காக்க வைத்ததற்கு வட்டியும் முதலுமாகச் சேர்ந்து வருவதுபோல் அன்று பகல் ஒரு மணி தபாலில் மூன்று தனித் தனிக் கடிதங்கள் மல்லிகைப் பந்தலிலிருந்து அவனுக்கு வந்தன. அந்தக் கடிதங்கள் கைக்குக் கிடைத்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் எல்லை யற்றவையாக இருந்தன. பூபதி தன் கடிதத்தைக் கண்டு அதில் தான் வேண்டிக் கொண்டிருந்தபடி தனக்கு மல்லிகைப்பந்தல் கல்லூரியில் வேலைகொடுப்பார் அல்லது விரும்பாவிட்டால் கொடுக்கமாட்டார் என்று மட்டும்தான் சத்தியமூர்த்தி எதிர்பார்த்திருந்தான். அவரோ அவனுக்கு ஆர்டரும் அனுப்பிவிட்டுத் தனியாக ஒரு கடிதமும் எழுதியிருந்தார். ஆர்டர் கல்லூரி அலுவலகம் மூலம் தனியாக வேறோர் உறையில் வந்திருந்தது. மூன்றாவது கடிதம் பாரதியிடமிருந்து வந்திருந்தது. படிப்பதற்கு மனம் முந்துகிற அந்தக் கடிதத்தை இறுதியில் படித்துக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டு பூபதியின் கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கலானான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/162&oldid=595128" இலிருந்து மீள்விக்கப்பட்டது