பக்கம்:பொன் விலங்கு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 167

இருக்க முடியும்? ஆர்டர் அனுப்பியவுடன் நன்றி செலுத்திப் பூபதிக்கு நான் எழுதிய கடிதத்துக்கும் அம்மாவின் அர்ச்சனைக்கும் தான் என்ன வேறுபாடு? என்று நினைத்து வியந்தான் சத்தியமூர்த்தி. 'அண்ணா இந்த வேலை எப்படியும் உனக்குக் கிடைத்துவிடும் என்று எனக்குத் தெரியும். நீ இண்டர்வ்யூவுக்குப் புறப்பட்டுப்போன அன்று இரவே நான் கோவிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்" என்று தனியாக அவன் அருகே வந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாள் தங்கை ஆண்டாள். நாலைந்துமுறை கண்ணாயிரத்தைப் பார்க்கச் சொல்லித் தன்னைத் துன்புறுத்திவிட்ட காரணத்தினால் இன்று எதிர்பாராத நிலையில் இந்த ஆர்டர் கிடைத்ததைக் கண்டதும் தந்தை தன்னிடம் மனத்தை விட்டுப் பேசவோ மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளவோ முடியாமல் தயங்கி வெட்கப்படுகிறார் என்பதையும் அப்போது அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று மாலையில் அவன் குமரப்பனைச் சந்திக்கப் போயிருந்தான். மல்லிகைப்பந்தல் கல்லூரியிலிருந்து தனக்கு ஆர்டர் கிடைத்துவிட்ட செய்தியை சத்தியமூர்த்தி மகிழ்ச்சியோடு தன் நண்பனிடம் தெரிவித்தான். அந்த நல்ல செய்தி.குமரப்பனுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. இருவரும் வழக்கம்போல் உலாவப் போனார்கள். திரும்பி வரும்போது குமரப்பனே தற்செயலாய்ச் சித்திரைப் பொருட்காட்சியைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தான்.

'சத்தியம் சித்திரைப் பொருட்காட்சிக்கு ஒரு நாள் போக வேண்டும். எங்கள் பத்திரிகைக்குப் பாஸ் வந்திருக்கிறது. உனக்கு என்றைக்கு வசதிப்படும் என்று சொன்னால் அன்றைக்கு நாம் இருவரும் போய் வரலாம்."

"பெளர்ணமியன்று போகலாம் குமரப்பன் நான் ஏற்கெனவே பெளர்ணமியன்று அந்தப் பொருட்காட்சிக்குப் போகலாமென்று நினைத்திருந்தேன்." -

"ஐயையோ அழகர் ஆற்றில் இறங்குகிற நாளில் பார்த்தா போகவேண்டும் என்கிறாய்? கூட்டம் தாங்க முடியாதே? போதாத குறைக்குச் சித்ரா பெளர்ணமியன்று நாட்டியக் கலைமணி குமாரி மோகினியின் ஆண்டாள் நடனம் வேறு ஏற்பாடாகியிருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/169&oldid=595142" இலிருந்து மீள்விக்கப்பட்டது