பக்கம்:பொன் விலங்கு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i80 பொன் விலங்கு

மறுப்பவை போல் மேலே நடந்து அந்தச் சந்துக்குள் போய்க் கொண்டிருந்தன. அவள் அடையாளம் சொல்லியிருந்த அந்த வீடும் வந்துவிட்டது. படியேறி உள்ளே போக நினைப்பதிலும் ஒரு சிறிது தயக்கம் ஏற்பட்டது. யாரோ கதவைத் திறந்தார்கள். உள்ளே போவதற்காகப் படியேறத் தொடங்கியிருந்த சத்தியமூர்த்திவருகிறவர்களுக்கு வழிவிடுவதற்காகச் சற்றே விலகினான். வந்தது வேறு யாருமில்லை. அன்று தேடி வந்த அந்தச் சிறுவன்தான் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வந்தவன் சத்தியமூர்த்தியைப் பார்த்தானோ, இல்லையோ, வாங்க சார் என்று மலர்ச்சியோடும், உற்சாகத் துள்ளலோடும் கூறிவிட்டு, வீட்டின் உள்ளே ஓடினான். வாசற்படியைக் கடந்து உள்ளே நுழைந்ததும் 'கம்'மென்று சாம்பிராணிப் புகையின் நறுமணம் கமழ்ந்து கோயிலுக்குள் நுழைவதைப் போன்ற சூழ்நிலையை உண்டாக்கிற்று. மேற்கொண்டு உள்ளே போவதற்குத் தயங்கியபடி நடையிலே நின்றான் அவன். வீடு அமைதியாக இருந்தது.

"வாருங்கள் இப்போதாவது வர வழி தெரிந்ததா இன்று இந்த வீடு பாக்கியம் செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்' என்ற அழைப்போடு எதிரே வந்து சிரித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து மலைத்துப் போனான் அவன். முதுகில் காடாய்ப் புரளும் கருங் கூந்தலை நடுவாக ரிப்பனில் முடிந்து ஒரு கொத்து மல்லிகைப் பூவை அந்த இடத்தில் சொருகியிருந்தாள் மோகினி. அவசரமாகவும், கை போன போக்கிலும் அள்ளிச் சொருகிக் கொள்ளப் பெற்றிருந்த அந்தப் பூவானது பார்ப்பதற்குக் கூந்தலிலேயே பூத்துத் தொங்கி இடம் கொள்ளாமல் சாய்ந்து சரிந்த மாதிரி அழகாக இருந்தது. சந்திர பிம்பமாக மின்னும் முகத்தில் நெற்றியின் நடுவே தீபச்சுடரைப் போல் ஒரு கீற்றுக் குங்குமத்தை எடுத்துத் தீற்றிக் கொண்டு வந்திருந்தாள். -

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் சிறிது நேரத்தில் கோவிலுக்குப் புறப்பட வேண்டும் என்பதற்காகத் திரும்பவும் நீராடிவிட்டு வந்தேன். ஈரத் தலைக்குப் புகைபோட்டுக் கொண்டிருந்தேன். ஒருநாளும் இல்லாத திருநாளாக இந்தப் பையன் ஓடிவந்து நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னான். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. பரக்கப் பரக்கத் தலையை ரிப்பனால் கட்டிப் பூவை அள்ளிச்சொருகிக் கொண்டு இங்கே வந்து பார்த்தால் நிஜமாகவே நீங்கள்தான் வந்திருக்கிறீர்கள். இந்த ஆச்சரியத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/192&oldid=595195" இலிருந்து மீள்விக்கப்பட்டது