பக்கம்:பொன் விலங்கு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 191

எப்படிக் கொண்டாடுவதென்றே தெரியவில்லை எனக்கு உள்ளே வாருங்கள். உட்காருங்கள்' என்று ஆவலோடும் அன்போடும் அவனை உள்ளே அழைத்தாள் மோகினி. ஊருக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்திருந்த சத்தியமூர்த்தி அங்கே நீண்ட நேரம் உட்கார்ந்து பேசுவதற்குத் தயங்கினான்.

'ஒன்றுமில்லை! நான் அன்றைக்குச் சித்திரைப் பொருட் காட்சியிலே உங்களைச் சந்தித்தபோது சொல்ல மறந்துவிட்டேன். எனக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை கிடைத்திருக்கிறது. நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புறப்பட்டு விடுவேன். உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றியது. வந்தேன்."

இதைக் கேட்டு ஒன்றும் பேசத் தோன்றாமல் சிறிது நேரம் அப்படியே திகைத்துப்போய் நின்றாள் அவள். அந்தக் கவர்ச்சி நிறைந்த முகம், கண்கள், இதழ்கள் எல்லாம் திடீரென்று இருந்தாற்போலிருந்து அப்படியே சித்திரமாக மாறிவிட்டாற்போல் அமைதியுற்றன. அந்தக் கண்களின் சிரிப்பும், குறுகுறுப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து அவைகளில் எதையோ இழந்துவிடப் போவதைப் போன்ற சோகம் தெரிந்தது. அந்த வேதனையைக் கண்டு சத்தியமூர்த்தியே மனம் பொறுக்காமல் மேலும் கூறலானான்: "மனம் தளராதீர்கள் நான் ஊருக்குப் போவதை உங்களிடம் சொல்லிவிட்டுப் போக வந்தேனென்பதைவிட உங்களுக்குத் தைரியம் சொல்லிவிட்டுப் போகவே இங்கு வந்ததாக நினைக்கிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அன்று எப்படிப்பட்ட பரிதாபகரமான சூழ்நிலையில் உங்களை நான் காப்பாற்றினேனோ அப்படிப்பட்ட சூழ்நிலை இனி ஒரு நாளும் உங்களுக்கு வரக்கூடாது. உங்களுடைய அழகும். நீங்கள் பயின்றிருக்கும் கலையின் அழகும் உலகத்துக்கு நெடுங்காலம் நல்லபடியாகப் பயன்படவேண்டும். நான் செய்த உதவி மிகவும் சிறியது. அதற்காக நீங்கள் என்மேல் செலுத்துகிற மதிப்பும், மரியாதையும் அதிகமானவை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் இயற்கையாகச் செய்துகொள்ள முடியாத எந்த அபூர்வமான உதவிகளையும் உங்களுக்கு நான் செய்துவிடவில்லை. எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/193&oldid=595197" இலிருந்து மீள்விக்கப்பட்டது