பக்கம்:பொன் விலங்கு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பொன் விலங்கு

பெயரை உபயோகித்து அந்த மாணவர்கள் பரம உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். -

சத்தியமூர்த்திக்கு மாணவர்களின் அந்த அரட்டையைக் கேட்கக் கேட்கச் சிரிப்பு ஒரு பக்கமும் வேதனை ஒரு பக்கமுமாக இருந்தது. போராட்டங்களும், சாதனைகளும் நிறைந்த தன்னுடைய கல்லூரி நாட்களை நினைத்துக் கொண்டான் அவன். துடிதுடிப்பு நிறைந்தவர்களாக இருப்பதும் இப்படி வம்பு பேசுவதும் இல்லாத மாணவர்களை உலகம் முழுவதும் தேடினாலும் காணமுடியாது. ஆனால் ஆசிரியர்கள் அறிவின்கம்பீரமும், தோற்றத்தின் கம்பீரமும் உள்ளவர்களாக இருந்தால் மாணவர்களை ஒரளவு கட்டுப்பாட்டோடு ஆளலாம்' என்று அவன் மனம் சிந்தித்தது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய் பஸ் நிற்கிறவரை 'வற்றல் குழம்பையும் கீரை வடை'யையும் பற்றியே வெகு உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள் அந்த மாணவர்கள். அந்தப் பெயர்களெல்லாம் அப்பாவி ஆசிரியர்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் என்று சிறிது நேரம் தொடர்ந்து அவர்களுடைய பேச்சை செவிமடுத்ததிலிருந்து சத்தியமூர்த்தி அனுமானம் செய்துகொண்டு அறிந்தான். அந்த மாணவர்களின் வம்பையும் வாயரட்டையையும் கேட்டுப் பக்கத்திலிருந்த தாவர இயல் விரிவுரையாளர் மருள்வதையும் அவன் கவனித்தான்.

மஞ்சு படிந்து மங்கிய கட்டிடங்களும் மலைச் சூழ்நிலையில் கண்ணுக்குக் குளுமையாக அடங்கித் திரியும் மின்விளக்குகளுமாக இரவில் அந்த நகரம் மிக அழகாக இருந்தது. ஊரின் நடுமையாக இருந்த ஏரியில் மின் விளக்குகள் ஆடி அசைந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வட்டவடிவமாக இருந்த அந்த ஏரியைச் சுற்றிலும் சாலையில் வரிசையாக அமைந்திருந்த மின் விளக்குகள் அந்தரத்திலிருந்து நழுவி விழும் ஒரு மாபெரும் ஒளியாபரணத்தைப் போல் தோன்றியது. சில்லென்று மலைக்குளிர் உடம்பில் உறைத்தது. பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்றபோது ஊரே உறங்கிப் போயிருப்பது போல அத்தனை அமைதியாக இருந்தது. உடன் பயணம் செய்த தாவர இயல் விரிவுரையாளருக்கு யாரோ தெரிந்தவர்கள் வீடு இருந்ததால் அங்கே தங்குவதற்குப் போய்விட்டார் அவர். பொருளாதார விரிவுரைய ாளரும் அவசரமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/218&oldid=595253" இலிருந்து மீள்விக்கப்பட்டது