பக்கம்:பொன் விலங்கு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 245

கவனிக்காததுபோல் வேகமாக முன்னால் நடந்துபோய்ப் பாடனி விரிவுரையாளரோடு சேர்ந்து கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி, பொன் தூவினாற் போன்றிருந்த சாயங்கால வெய்யிலில் நூலிழை நூலிழையாய்ப் பன்னீர் தெளிப்பதெனச் சாரல் பெய்யத் தொடங்கியிருந்தது. பாடனி விரிவுரையாளரின் கூச்சத்தை நீங்கச் செய்து அவரோடு பேசிக்கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி. அந்த சாயங்கால வேளையில் மல்லிகைப் பந்தல் ஊரும் கருநீலங்கன்றிய மலை முடிகளும் சொல்லி மாளாத கொள்ளை அழகுடைய தாகத் தோன்றிக் கொண்டிருந்தன. சாரலும் பொன் வெயிலும் அந்த அழகை மேலும் அலங்கரித்தன.

கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டுச் சத்தியமூர்த்தி பாடனி விரிவுரையாளரோடு லேக் சர்க்கிளில் இருந்த தன் அறைக்குப் போய்க் கொண்டிருந்தான். சுபாவத்துக்கு அதிகமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த பாடனி விரிவுரையாளருடன் தான் பழகிய முறையினாலும் பேசிய விதத்தினாலும் சத்தியமூர்த்தி சிறிது மாறுதலை உண்டாக்கியிருந்தான். அந்த இளைஞரும் தங்கி வசிப்பதற்கு அறை தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

'இந்த அறையில் என்னோடு இன்னும் இரண்டு பேரை உடன் வைத்துக் கொள்வதாக இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம்' என்று சத்தியமூர்த்தி அவரிடம் தெரிவித்திருந்தான். ஒருவேளை சத்தியமூர்த்தி அதைத் தனக்கு மட்டும் தனி அறையாக வைத்துக்கொள்ள விரும்பலாமோ என்று எண்ணித் தான் கேட்கத் தயங்கியதாகவும் மற்ற இருவரை உடன் தங்க வைத்துக் கொள்கிற பட்சத்தில் முதல் ஆளாக உடனே தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பாடனி விரிவுரையாளர் கேட்டார். சத்தியமூர்த்தியும் அதற்கு ஒப்புக் கொண்டான். மாலை ஐந்து மணிவரை அறையிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு இருவரும் சேர்ந்தே பூபதி அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த விருந்துக்குப் புறப்பட்டார்கள். .

"மாகாணத்திலேயே தலை சிறந்த கல்லூரி என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரியும் வம்புகள் நிறைந்ததாயிருக்கும்போல் தோன்றுகிறது சார்...' என்று பயந்துகொண்டே சுற்றும் முற்றும் மிரண்டுபோய்ப் பார்த்தவாறு கூறினார் பாடனி விரிவுரையாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/247&oldid=595317" இலிருந்து மீள்விக்கப்பட்டது