பக்கம்:பொன் விலங்கு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 249

வந்திருந்தவர்களைப் படித்துக் கொண்டிருந்தான். சிலர் மனம் நிறைய அழுது கொண்டே கூட்டத்தையும் தன்னையும் ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு வாய் நிறையச் சிரித்தார்கள். இன்னும் சிலர் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொள்வதையே துக்கம் விசாரிப்பதுபோல தவிர்க்க முடியாமல் செய்து கொண்டிருந்தார்கள். சுகமோ துக்கமோ, உணர்ச்சிகளில் ஆழ்ந்து நிற்கத் தெரியாத மனிதர்கள் எட்டுக்கால் பூச்சி ஊர்வதுபோல் பொது இடத்தில் பட்டும் படாமலும் பழகுகிற அழகைக் கவனித்து இதயம் புழுங்கிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, கல்லூரி நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர் களுக்குமிடையே எப்போதும் சுமுகமான உறவு நிலவுதற்கும் குடும்பப் பாங்கான சூழ்நிலை உண்டாவதற்கும் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இப்படி ஒரு தேநீர் விருந்து நடைபெறுவதாகக் கூறிக் கல்லூரி அதிபரின் தாராள மனப் பான்மையைப் புகழ்ந்து எல்லோரையும் வரவேற்று ஆங்கிலத்தில் பேசி விருந்தைத் தொடக்கி வைத்தார் முதல்வர். முதல்வர் அவ்வாறு கல்லூரி நிர்வாகியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, 'முதலை எவ்வளவு நாகரிகமாகக் காக்காய் பிடிக்கிறது பாரும் ஐயா என்று சத்தியமூர்த்தியின் பக்கத்திலிருந்த ஒரு விரிவுரையாளரிடம் இன்னொரு விரிவுரையாளர் முணுமுணுத்ததை அவனும் கேட்டான். விருந்து தொடங்கியது. சிற்றுண்டிக்குப்பின் எல்லார் முன்பும் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த கப்-ஸாசரில் பரிமாறுகிறவன் ஆவிபறக்கும் தேநீரை ஊற்றிக்கொண்டு போனபோது சத்திய மூர்த்தியை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டான். ஆனால் பாரதி அவனையே கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொள்ளும்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

தான் உட்கார்ந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து விறுவிறுவென்று எழுந்துவந்த பாரதி பரிமாறுகிறவன்கையிலிருந்த தேநீர்க் கெட்டிலை வாங்கிச் சத்தியமூர்த்தியின் அருகே வந்து அவனுடைய தேநீர் கோப்பையை நிறைத்த பின்பே தன் மனம் நிறைந்தவளாகத் திரும்பிச்சென்றாள். விருந்து நடத்துகிறவருடைய மகள் என்ற முறையில் அவள் அப்படிச்செய்ததை எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ள இடமில்லையாயினும் தனக்காக அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/251&oldid=595327" இலிருந்து மீள்விக்கப்பட்டது