பக்கம்:பொன் விலங்கு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பொன் விலங்கு

போனான் அவன். அந்த வகுப்பில் காலையில் தான் நடத்திய ஆங்கிலக் கவிதையைப் பற்றிய விரிவுரையைப் பூபதி கேட்க நேரும் என்றோ அதன் விளைவாக உண்டாக்கிய புகழ்ச்சியால் தன்மேல் இத்தனை அகுயைகள் குறிவைத்துப் பாயும் என்றோ அவன் ஒருசிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயத்தில் அவன் இந்த விளைவுகளுக்காக பயப்படவும் இல்லை. உணர்ச்சியும், மலர்ச்சியும் நிறைந்த இளம் மாணவர்கள் கூட்டம் தான் நடக்கிற வழியில் தனக்குப் பின்னால் தொடர்ந்து வருவதற்கு தயாராக இருக்கும்போது மூத்த பொய்ம்மைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நம்பினான் அவன். நீங்கள் இந்தக் கல்லூரிக்கு விரிவுரையாளராக வந்தபின் எப்படிப்பட்ட முரட்டு இளைஞர்களும் உங்களைச் சுற்றிக் கைகூப்பிக் கொண்டு திரியப் போகிறார்கள்; பாருங்களேன் என்று பூபதியின் மகள் பாரதி தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்ததை நினைத்துக் கொண்டான். கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க் சிதம்பரமும் முதலிலிருந்தே தன்னிடம் பழகுகிற விதம் சரியாயில்லை என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. அதை நினைத்தும் அவன் கவலைப்படவில்லை. அந்த இரண்டு மூன்று நாட்களிலேயே மாணவர்கள் மனதில் எல்லாம் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் கல்லூரிக்குள் நுழையும் போதும், கல்லூரி முடிந்து வெளியேறும் போதும் மலர்ச்சி நிறைந்த முகங்களோடு மாணவர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொள்வதைப் பார்த்துக் கல்லூரி முதல்வரும், வேறு சில வயதான ஆசிரியர்களும் அந்தரங்கமாக மனம் புழுங்கினார்கள். மலர்ந்த முகத்தோடு அளவாகவும், அழகாகவும், சிரித்துப் பழகுகிற சுபாவம். நயமும் கருத்தும் கலந்த உரையாடல். எதைப்பற்றியும் சிக்கலோ, முரண்பாடோ இல்லாமல் விவாதிக்கும் திறன். இவற்றால் அந்தக் கல்லூரியின் மாணவர்களை எல்லாம் அபிப்பிராய பேதத்துக்கு இடமில்லாமல் மொத்தமாகக் கவர்ந்துவிட்டான் சத்தியமூர்த்தி. அரைகுறையாகப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நன்றாகவே பொறாமைப்படும்படியான காரியம் ஒன்று ஒருவாரம் கழித்து நடந்தது. கல்லூரி நிர்வாகி என்ற முறையில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை எப்போதாவது கல்லூரிக்கு வந்து சுற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/264&oldid=595355" இலிருந்து மீள்விக்கப்பட்டது