பக்கம்:பொன் விலங்கு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பொன் விலங்கு

இருக்கிறோமோ அங்கிருந்து பறந்து போய்விடத்தான் நீயும் நினைக்கிறாய். நானும் நினைக்கிறேன். ஆனால் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து, கட்டுப்படுத்தியபடி கட்டுண்டு முடியவேண்டுமென்றுதான் உன் தலையிலும் என் தலையிலும் ஒன்றாக எழுதியிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. நீ இருக்கிற கூட்டை இரும்பு அளியிட்டு மூடியிருக்கிறார்கள். நான் இருக்கிற கூட்டை அப்படி யாரும் மூடிப் பூட்டி வைக்கவில்லை. வாசல், கொல்லை, கூடம், மேசை நாற்காலி, கட்டில், மெத்தை எல்லாம் இருக்கிற சுகமான கூட்டில் நான் அடைபட்டிருக்கிறேன். என்னுடைய கூட்டில் வாசலும், புறக்கடையும் திறந்தே இருந்தாலும் நான் வெளியேற முடியாது. சொல்லிக் கொடுத்தபடி ஆடவும், அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் நான் அடைபட்டிருக்கிறேன். சொல்லிப் பழக்கப்படுத்தப் பெற்ற ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு நீயும் அடைபட்டிருக்கிறாய். நீயும், நானும் அழகாயிருக்கிறோம் என்று உலகம் திருப்திப்படலாம். ஆனால் சுதந்திரமாயிருக்க முடியாத வரையில் நாம் திருப்திப்பட என்ன இருக்கிறது?’ என்று இப்படியெல்லாம் நினைத்துப் பெருமூச்சு விட்டாள் மோகினி. அதே மண்டபத்தின் அருகே முன்பு சத்தியமூர்த்தியை சந்தித்ததும், திருச்சுற்றில் வலம் வரும்போது அவன் பாதங்களைத் தொட்டு வணங்கியதும் நினைவு வந்து அவளைக் கண்கலங்கச் செய்தன. அந்தக் கணத்தில் அவளுடைய ஞாபகம் தான் தொட்டு வணங்கிய பாதங்களில் போய்ப் பதிந்தது அல்லது அவளுடைய ஞாபகத்தில் அந்தப் பாதங்கள் வந்து பதிந்தன. மீண்டும் மற்றோர் உரத்த இடியோசையில் மருண்ட அந்தக் கிளி மறுபடியும் சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் ஆற்றாமையோடு சட்டத்தில் வந்து அமர்ந்தது. அந்தப் பஞ்சவர்ணக்கிளியின் வெல்வெட் உடம்பையும் அதில் நிறங்களில் புரண்டெழுந்தாற் போன்ற பளப்பளப்பையும் பார்த்து 'மீனாட்சி மீனாட்சி என்ற ஒரே வார்த்தையைக் கதறி, அதைத் தவிரக் கதறுவதற்கு வேறு பதமும் பறப்பதற்கு வேறு இடமும் கிடைக்காமலே தவிப்பதையும் உணர்ந்து,அந்த உணர்ச்சியிலேயே தன்துயரத்தையும் புரிந்து கொண்டவளாய் மலைத்து நின்றாள் மோகினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/274&oldid=595377" இலிருந்து மீள்விக்கப்பட்டது