பக்கம்:பொன் விலங்கு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பொன் விலங்கு

குமரப்பன் பதிலே சொல்லாமல் தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களை சத்தியமூர்த்தியின் சட்டைப்பையில் திணித்துவிட்டுச் சிரித்தான். அதற்கடுத்த வாரம் ஒரு விடுமுறை நாளில் பெற்றோரைப் பார்ப்பதற்காகச் சத்தியமூர்த்தி மதுரைக்குப் போய்விட்டுத் திரும்பினான்.அவன்போயிருந்த ஒரே ஒருநாளில் எப்படியோசிறிது நேரம் மீதிப்படுத்திக் கொண்டு மோகினியைச் சந்திக்கும் ஆவலோடு அவள் வீட்டுக்குச் சென்றிருந்தான்.மோகினியும் அவள் தாயும் ஏதோ நாட்டியத்துக்காகவெளியூர்போயிருந்ததனால் அவன் ஏமாற்றத்தோடு திரும்பவேண்டியதாயிற்று.

மல்லிகைப் பந்தல் கல்லூரியில் மாணவர் யூனியன்களின் காரியதரிசிகளுக்கான தேர்தலும் முடிந்து மாணவர்களின் மொழிவாரி மன்றங்களுக்கான இலக்கியத் தொடக்கவிழாக்களும் ஒவ்வொன்றாக நிகழலாயின. தமிழ் மன்றத் தொடக்கவிழாவுக்கு நவநீத கவியை அழைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர் மன்றத் தலைவி என்ற முறையில் பாரதியும் நவநீதக் கவியை அழைப்பதற்கு இணங்கினாள். 'சென்னையிலிருந்து நவநீத கவி - வந்து போவதற்கு நூற்றைம்பது ரூபாய்க்குமேல் பயணச் செலவு ஆகுமே? பக்கத்து ஊர்களிலிருந்து யாரையாவது அழைத்துச் சிக்கனமாக நடத்தி விட்டால், என்ன? கல்லூரிகளில் இந்த விழாகிழா எல்லாம் சும்மா ஒரு 'ஃபார்மாலிடி தான் மிஸ்டர் சத்தியமூர்த்தி, இதுக்காகவே நேரத்தை வீணாக்கக்கூடாது, எல்லாம் போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..." என்று முதல்வரும், காசிலிங்கனாரும் நவநீத கவியை அழைப்பது பற்றி அசிரத்தையாகப் பேசினார்கள். இந்த அசிரத்தையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நவநீத கவியையே அழைத்துத் தமிழ் மன்றத் தொடக்க விழாவை நிகழ்த்தி மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டான் சத்தியமூர்த்தி. தொடக்கவிழாவன்று நவநீதகவி பேசிய சில கருத்துகள் அதிக முற்போக்காகவும்-ஏதோ ஒர் அரசியல் கட்சிச் சார்புடையன போலவும் தோன்றின என்று முதல்வரும் காசிலிங்கனாரும் வீண்புரளியைக்கிளப்பிவிட்டு மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்தப் புரளிக்காகச் சத்தியமூர்த்தி ஒரு சிறிதும் அஞ்சவில்லை. நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. கல்லூரியில் காலாண்டுத்தேர்வுக்குத் தேதிகளும் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கைவந்துவிட்டது. விடுதிகளில் பரீட்சைக்குப் படிப்பதற்காகக் கண்காணிப்பு அதிகமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/396&oldid=595636" இலிருந்து மீள்விக்கப்பட்டது