பக்கம்:பொன் விலங்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பொன் விலங்கு

'இத்தகைய கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வதுபோல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கி விடாமலும் பழகவேண்டும்."

"புரிகிறது சார்..."

'மனம் விட்டு உண்மையைச் சொல்கிறேன், மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும். பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்துவிட்டிர்கள் உங்களைப்போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள்தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக்கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால்?"

-என்று மீண்டும் அவர் எதையோ சொல்லத் தயங்கி நிறுத்தியபோது சத்தியமூர்த்தி எவ்வளவோ நிதானமாயிருந்தும் சற்றே பொறுமையிழந்து விட்டான்.

“என் வயதும் இளமையும் எனக்கு ஒரு தகுதிக் குறை என்று நீங்கள் நினைப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை சார்! இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டுவிட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வரன் முறையின்றி வாழ்கின்றவர் களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்' -என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறாற்போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டுவிட்ட பின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ? என்று தனக்குள் எண்ணித் தயங்கி நின்றாள். திறை மறைவில் இருந்தபடியே தலையை நீட்டி அப்பாவின் முகம் இந்தப் பேச்சைக் கேட்ட பின்பு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்த போதும் அது நிச்சயமாகச் சரியாயில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/40&oldid=595641" இலிருந்து மீள்விக்கப்பட்டது