பக்கம்:பொன் விலங்கு.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 465

தாயான முத்தழகம்மாளைப் பற்றியும் அவர் அவ்வளவாகப் பெருமைப்படுத்திச் சொல்லவில்லை. அதே சமயத்தில் மோகினியைப் பற்றி மட்டும் மிக உயர்வாகச் சொன்னார். கவிஞர் ஒருவரைக் காதலித்து அந்தக் காதல் நிறைவேறாததனால் சிறிய வயதிலேயே நிராசையோடு இறந்துபோன மோகினியின் பெரிய பாட்டி 'மதுரவல்லி'யைப் பற்றியும் பெருமையாகச் சொன்னார். இந்தப் பெரிய பாட்டியைப் பற்றி மோகினியே தன்னிடம் ஒருநாள் சிறப்பித்துச்சொல்லியிருந்தது இப்போது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது.

"இந்தப் பெண் மோகினி சின்ன வயதிலிருந்தே நெருப்பாய் வளர்ந்தவள் ஐயா. யாரையும் பக்கத்திலே நெருங்க விட்டதில்லை. அவள் முகத்தைப் பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கிறதிலிருந்தே இதை நீங்கள் தெரிஞ்சுக்கலாமே! இந்த விநாடிவரை நடத்தையிலே அப்பழுக்குச் சொல்ல முடியாது. இந்தப் பெண்ணை எவனாவது தாறுமாறாகப் பேசினால் அவன். நாக்கு அழுகிப் போய்விடும். ஆனால் குழந்தைப் பொண்ணு. கள்ளங் கபடு தெரியாத மனசு. அம்மா இருக்கிறப்பவே இந்தப் பெண் அவளை எதிர்த்துச் சண்டை போடும். இப்போ அந்த அம்மாவும் கண்ணை மூடிப்பிட்டா. இனிமேல் இந்த ஜமீன்தாரும் கண்ணாயிரமும் என்ன பாடுபடுத்தி வைக்கப் போறாங்களோ?... இவ ரொம்ப அழகாயிருக்கிறதினாலேயும், நாட்டியத்திலே GL fr வாங்கியிருக்கிறதினாலேயும் ஜமீன்தார் விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறானென்று கேள்வி. பாவம் மோகினி இந்த மாதிரி வீட்டிலே பொறக்கற பொண்ணே இல்லை. எங்காவது நல்ல குடும்பத்திலே வீட்டுக்கு இலட்சுமியாய்ப் பிறந்திருக்க வேண்டிய பெண். இங்கே பிறந்து கஷ்டப்படனுமின்னு தலையிலே எழுதியிருக்கிறான்..." என்று மோகினியைப் பற்றிச்சொல்லி அலுத்துக் கொண்டார் பாட்டு வாத்தியார். இதைக் கேட்டுச் சத்தியமூர்த்தி நெட்டுயிர்த்தான். தனக்கும், மோகினிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பொதுவாக விசாரிப்பது போல்தான் இந்த விவரங்களைப் பாட்டு வாத்தியாரிடம் விசாரித்திருந்தான் அவன். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் பாட்டுவாத்தியாரும் எதற்காகவோ பயந்து நடுங்கியதைக்கண்டுதான் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான்.

பொ. வி. 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/467&oldid=595715" இலிருந்து மீள்விக்கப்பட்டது