பக்கம்:பொன் விலங்கு.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 497

காலமே அடங்கி ஒடுங்கி இயக்கமற்றுப் போய்விட்டதுபோல் மல்லிகைப் பந்தல் நகரமெங்கும் ஒருவகை அசதி தெரிந்தது. மென்று கவைத்து நிதானமாகச் சாப்பிடுகிறவனுக்குச் சோற்றில் உள்ள கல் தெரிகிறாற் போல் நின்று நிதானித்துப் பார்க்கிறவனுக்கு வாழ்க்கையின் துன்பங்கள் தெரிகின்றன. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் துன்பங்கள் எதிர்கொண்டு தெரிவதைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான். பிறர் பொறாமைப்படுவதற்கும் சிந்திப்பதற்கும் காரணமில்லாமலே தான் ஆளாகி விடுவதைப் பல சமயங்களில் அவன் புரிந்து கொண்டிருக்கிறான். பூபதியின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்துக் கல்லூரி மாணவர்கள் நடத்திய இரங்கற் கூட்டத்தில் தான் மனம் உருகிச் சொற்பொழிவாற்றியதற்கு வம்புக்காரர்கள் என்ன அர்த்தம் கற்பித்துப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்பதைக் கேட்டு அவன் மனம் வருந்தினாலும் பொறுத்துக் கொண்டான். மிருகத் தன்மைகள் இல்லாத மனிதர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் வாழ்வில் தென்படுகிறார்கள் என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு. அநுதாப ஊர்வலமும், கூட்டமும் முடிந்து அவன் அறைக்குத் திரும்பியபோது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. மழை 'இதோ வந்து விட்டேன்' என்று பயமுறுத்துவதுபோல் மேகங்கள் கவிந்து இருட்டிக் கொண்டிருந்தது. மழையை உறுதியாக எதிர்பார்த்துப் பாதுகாப்புச்செய்து கொண்டமாதிரி மனிதர்கள் கரும் பூதங்களைப் போல் மழைக் கோட்டுக்குள் புகுந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள். லேக் அவென்யூவில் மரங்களின் உச்சிகளில் கூட மேகங்கள் வந்து தழுவினாற்போல் தெரிந்தன. சத்தியமூர்த்தி நேரே மாடிப் படியேறி அறைக்குப் போகாமல் குமரப்பனுடைய கடைக்குள் நுழைந்தான். குமரப்பன் ஏதோ பெரிய விளம்பரப் பலகை ஒன்றைத் தரையில் வைத்துக் கீழே படுத்துவிட்டாற் போல் சாய்ந்து அதில் எழுதிக் கொண்டிருந்தான். - - - சத்தியமூர்த்தி கடைக்குள் வருவதைப் பார்த்துவிட்டு, “ஒரு பதினைந்து நிமிஷம் அந்த நாற்காலியில் உட்கார்ந்து செய்தித் தாளைப் படித்துக் கொண்டிரு சத்தியம்! இந்த வேலையை முடித்துவிட்டு வருகிறேன். இது ஒரு ஜவுளிக் கடை போர்டு. தீபாவளி சீஸனுக்காக எழுதச் சொல்லியிருக்கிறார். விரைவில்

பொ. வி -32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/499&oldid=595750" இலிருந்து மீள்விக்கப்பட்டது