பக்கம்:பொன் விலங்கு.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 பொன் விலங்கு

முடித்துக் கொடுத்துவிடவேண்டும்" என்றான் குமரப்பன். "ஆகா! தாராளமாக உன் வேலையை முடித்துவிட்டு வா! நான் நீ வரும்வரை காத்திருக்கிறேன்" என்று நண்பனுக்கு மறுமொழி கூறிய சத்திய மூர்த்தி நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் செய்தித்தாளைப் படித்தான். அப்புறம் நண்பனுடைய அந்தச் சிறிய கடையை நன்றாக உற்றுப் பார்த்துக் கவனிப்பது போல் அங்கும் இங்குமாக உலாவினான். ஒரு மூலையில் நாய்கள் ஜாக்கிரதை' என்ற சிறிய எச்சரிக்கைப் பலகைகள்-எழுத்துடனும் நடுவில் ஒரு நாய்த் தலை படத்துடனும் பளபளவென்று புதிய வண்ணத்தில் தொடாதே அபாயம்' என்ற எச்சரிக்கைப் பலகைகளும் சில இருந்தன. சத்தியமூர்த்தி இந்த விளம்பரப் பலகைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குமரப்பன் தன் வேலையை முடித்துக் கொண்டு கைகழுவிவிட்டு அவனருகே வந்து நின்றான். அப்போது குமரப்பனுடைய முகத்தில் குறும்புத்தனமானதொரு மலர்ச்சி தெரிந்தது.

"என்னடா சத்தியம்! நமது கலைக் கூடத்தில் உருவாகும் அமர இலக்கியங்களையெல்லாம் இவ்வளவு கவனமாகப் பார்க்கிறாயே? இந்தக் கடை ஆரம்பமான நாளிலிருந்து இங்கே அதிகமாகச் செலவழிந்திருக்கிற போர்டுகள் என்ன தெரியுமா? நாய்கள் ஜாக்கிரதை' என்ற போர்டுதான். பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் இங்கே ஒரு 'டாக்-ஷோ (நாய்க்காட்சி) நடந்ததே. அந்த நாய்க் காட்சியில் பலர் புதிய நாய்கள் விலைக்கு வாங்கினார்கள். அதோடு நம் கடைக்கு வந்து இந்தப் போர்டிலும் ஒன்று வாங்கிக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு பங்களாவிலும் நாய்கள் இருக்கும் என்பதும் அவை கடிக்கும் என்பதும்-எங்கும் எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே? அப்படி இருக்கும்போது 'நாய்கள் ஜாக்கிரதை' என்று இரண்டு வார்த்தைகளை எழுதி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? சும்மா-'ஜாக்கிரதை' என்று மட்டும் ஒவ்வொரு பங்களாவின் வாசற் கதவிலும் போர்டு போட்டால் போதுமே? அந்தப் போர்ட்டைப் பார்த்ததுமே அது ஒரு பங்களா என்பதையும்-அதற்குள் நாய்கள் இருக்கும் என்பதையும்-அவை கடிக்கும் என்பதையும் பார்த்தவன் தெரிந்துகொள்ள முடியாதோ? என்று முதல்நாள் போர்டு வாங்க வந்த ஓர் பணக்கார ஆளிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/500&oldid=595753" இலிருந்து மீள்விக்கப்பட்டது