பக்கம்:பொன் விலங்கு.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 பொன் விலங்கு

தங்கியிருந்த போது மோகினியின் இணையற்ற நடனத்தையும் அவளையும் பாரதி அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அதற்குப் பின் இரண்டோர் ஆண்டுகளில் மஞ்சள்பட்டிஅரண்மனைநவராத்திரி விழாவில் அவளுடைய நடனத்தைக் கண்டு வியந்திருக்கிறாள். அவளிடமோ, அவள் தாயிடமோ தானும் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளவேண்டுமென்ற ஆசைகூடப் பாரதிக்கு இருந்ததுண்டு.

கார் காலத்து முல்லைக்கொடி சிரித்துக்கொண்டு நடந்து வருவதுபோல் நடப்பதே ஓர் அழகு நடனமாய் வருகிற மோகினியை பலமுறை மதுரையில் நாட்டிய மேடைகளில் அவள் பார்த்திருக்கிறாள். அழுதழுது கலங்கிச்சிவந்த கண்களும், கலைந்து முன் நெற்றியிலும், காதோரமும் சுழலும் தூசி படிந்த கூந்தலும், தளர்ந்த நடையுமாகத் தனக்கு முன் இப்போது வந்து நின்ற மோகினியைப் பார்த்ததும் திகைப்பிலிருந்து விடுபட்டு அவளை வரவேற்று விசாரிக்கவே பாரதிக்கு சில கணங்களாயின. 'அக்கா! வாருங்கள் ஏன் இப்படி வாடிக் கருத்திருக்கிறீர்கள்? மதுரைக்கு வந்திருந்தபோது ஆஸ்பத்திரியில் பார்த்ததைவிட இப்போது இன்னும் மோசமாயிருக்கிறீர்களே?' என்று அவள் தன்னை விசாரித்ததற்குப் பதில் சொல்லாமல் 'அப்பா காரியம் ஆகிவிட்டது போலிருக்கிறதே?' என்று பாரதியிடம் அவள் தந்தையின் மரணத்துக்குத்துக்கம் விசாரித்துக் கொண்டு கண் கலங்கி நின்றாள் மோகினி. அவளுக்குப் பின்னால் காரிலிருந்து வீணையும் கையுமாக இறங்கி வந்த கணக்குப் பிள்ளையை ஜமீன்தாரும் கண்ணாயிரமும் நடுவழியில் மறித்துப் பேசிக்கொண்டு நின்றார்கள். கணக்குப் பிள்ளையிடம் ஏதேதோ பேசியபின் பாரதியும் மோகினியும் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்து ஜமீன்தாரும் கண்ணாயிரமும் 'பிரயாணம் நல்லாயிருந்ததா? உடம்பெல்லாம் செளக்கியம் தானே?" என்று அக்கறையாக விசாரித்தபோதுகூடக் குனிந்த தலை நிமிராமல் அப்படியே கடுமையாக இருந்துவிட்டாள் மோகினி. அவள் அப்படிப் பதில் சொல்லாமல் தன்னை அலட்சியம் செய்துவிட்டதில் ஜமீன்தாருக்குச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஊமைக் கோபம் மூண்டிருக்க வேண்டும் என்பதை அவர் முகம் கடுமையாக மாறியதிலிருந்தே பாரதி புரிந்து கொண்டாள். 'ஏன் ஐயா அப்பிடியே மலைச்சுப் போய் நிற்கிறீங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/554&oldid=595811" இலிருந்து மீள்விக்கப்பட்டது