பக்கம்:பொன் விலங்கு.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 553

காருக்குள்ளார இருக்கிற சாமான்களை எல்லாம் ஒண்ணொண்ணா எடுத்து வைக்கிறதுதானே?' என்று டிரைவரிடமும் கணக்குப் பிள்ளையிடமும் எரிந்து விழுவதன் மூலம் ஜமீன்தாருடைய அந்தக் கோபம் வெளிப்பட்டுத் தீர்ந்தது. இரண்டாவது தடவை ஜமீன்தார் சிறிது கடுமையாகவே, 'இந்தா மோகினி, உன்னையெத்தான் கேக்குறேன். பதில் சொல்றதுக்கு என்ன? உடம்புக்குச் சுகந்தானே? பிரயாணத்துலே ஒண்ணும் கொறைவில்லையே?’ என்று கேட்டபோது முன் போலவே நிமிர்ந்து பாராமல் ஆனால் தலையை மட்டும் மெல்ல அசைத்தாள் மோகினி. அவள் முகத்தில் அப்போதும் மலர்ச்சியோ சிரிப்போ இல்லை என்பதைப் பாரதி கூர்ந்து கவனித்தாள்.

'உடம்பிற்கு இதமா நல்லா வெந்நீர் வச்சுத் தரச் சொல்லிக் குளி. சாப்பிடு. ரெஸ்ட் எடுத்துக்க' என்று மோகினியிடம் சொல்லிய பின் பாரதியின் பக்கம் திரும்பி, 'நீ பார்த்துக் கவனிச்சுக்கம்மா! சும்மா நிற்கிறியே-'என்று துரிதப்படுத்திவிட்டுப் போய்ச் சேர்ந்தார் ஜமீன்தார். மோகினியோ ஜமீன்தார் போன பின்பும் நீண்ட நேரம் ஒன்றுமே பேசாமல் தலைகுனிந்து மெளனமாகக் கண்ணிருகுத்துக் கொண்டிருந்தாள். பாரதியோடும் கலகலப்பாகப் பேசவோ பழகவோ முயலவில்லை அவள். ஆனாலும் பாரதி அவளை அப்படியே விட்டுவிடவில்லை.

"ஏன் அக்கா அழlங்க...?" இதைக் கேட்டு மோகினியின் அழுகை இன்னும் பெரிதாகியது. அழகின் அரசி போலவும் கலையின் அதிதேவதை போலவும் விளங்கும் அந்த இலட்சுமீகரமான பெண் குமுறிக் குமுறி அழுவதைப் பார்த்து பாரதியால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. "நீங்கள்.அழக்கூடாது அக்கா...' என்று அவள் ஆறுதல் கூறத்தொடங்கவும், "அழாமல் என்ன செய்யறதம்மா! நான் பிறந்த பிறப்பை நினைச்சு அழறேன்' என்று பதில் வந்த மோகினியிடமிருந்து. -

'மதுரையைவிட்டு இங்கே வந்தது பிடிக்கவில்லையா உங்களுக்கு?" என்று சின்னக் குழந்தை ஆறுதல் கூறுவது போல் பேதமையாக அவளிடம் ஏதோ கேட்டாள் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/555&oldid=595812" இலிருந்து மீள்விக்கப்பட்டது