பக்கம்:பொன் விலங்கு.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 603

புறப்படும்படி ஆகிவிட்ட தென்று மோகினி கடிதத்தில் எழுதியிருந்தாள். இதைப் படித்த பின்பே பட்டுப்புடவைக் கடையிலிருந்து திரும்பும்போது மோகினி கண்கலங்கிய நிலையில் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பியதன் காரணம் பாரதிக்குப் புரிந்தது. மேலும், அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்குக் கல்லூரியில் வந்த இடையூறுகள் தீர்ந்து நியாயம் கிடைத்ததைப் பாராட்டியும் அவருடைய தந்தை யாரென்று பாரதியின் மூலம் தான் புரிந்துகொள்ள நேர்ந்ததைப் பற்றியும் எழுதியிருந்தாள் மோகினி. இவற்றைத் தவிர முதன் முதலாக இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது சத்தியமூர்த்தி தன்னைக் காப்பாற்றியதிலிருந்து சங்கீத விநாயகர் கோயில் தெருவில் தன் வீட்டுக்கு வந்து தன் இதயத்தை ஆண்டது வரை எல்லாம் கூறி, நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும்; அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும் என்று கடிதத்தை முடித்திருந்தாள் மோகினி. இவற்றையெல்லாம் கண்ணிருக்கிடையில் பாரதி படித்து முடித்தபோது அவள் பாக்கியசாலி என்று மோகினியின் மேல் பெருமையாகவும் இருந்தது. அதேசமயத்தில் அவள் பெற்றிருக்கும் பாக்கியம் எதுவோ அதுவேதான் இழந்துகொண்டிருக்கிற பாக்கியம் என்று அவள்மேல் பொறாமையாகவும் இருந்தது. காரை லேக் அவென்யூவிலுள்ள ராயல் பேக்கரி ரொட்டிக் கடை வாசலில் நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழிறங்கியபோது, பூமியில் மிதித்து நடப்பதற்கே சக்தியில்லாதவள் போல் சோர்ந்துபோயிருந்தாள் பாரதி. மாடிப்படி ஏறிப் போய்ச் சத்தியமூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்துத் தானே தன் கையினால் அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாக வேண்டும் என்று நினைத்தபோது அவளுடைய கால்கள் அந்தச் செயலைச் செய்வதற்காக முன்நோக்கி நடக்கத் துணியாமல் தயங்கின. மனம் மலைத்தது. நினைவுகள் கூசின. மோகினியிடம் சொல்லி ஒப்புக்கொண்டுவிட்ட வார்த்தை ஒன்றைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற பிடிவாதத்தை விட முடியாமல் தன்னுடைய ஆசையைத் தானே பலியிடுவது போன்ற அந்தக் காரியத்தைச் செய்வதற்காக நடைப்பிணமாய் மாடிப்படி ஏறினாள் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/605&oldid=595868" இலிருந்து மீள்விக்கப்பட்டது