பக்கம்:பொன் விலங்கு.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 பொன் விலங்கு

"படிகளிலேயே சுருண்டு விழுந்து விடுவோமா என்று பயப்படுமளவுக்கு அப்போது அவளுடைய கால்கள் ஒன்றோடொன்று பின்னின. அவளுடைய உடல் மேலே படியேறிக் கொண்டிருந்த அதே வேளையில் மனமும் உணர்ச்சிகளும் கீழே அதல பாதாளத்துக்குச் சரிந்து தலை குப்புறக் கவிழ்ந்து வீழ்ந்து கொண்டிருந்தன. அரிய முயற்சி செய்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

முகத்தில் அழுத சுவடு தெரியாமல் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு, துடைத்தெடுக்க முடியாத அழுகையின் சாயலோடும் கையில் கடித உறையோடும் அவள் சத்தியமூர்த்தியின் அறைக்குள் நுழைந்தபோது, நல்ல வேளையாக அறையில் அவன் மட்டுமே தனியாக இருந்தான். மேனியில் வெள்ளை வெளேரென்று மின்னலாய் வழியும் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து பொன் மின்னலொன்று வெறும் மின்னலையுடுத்தி வீற்றிருந்தாற் போல் கல்லூரிக்குப் புறப்படத் தயாராகிவிட்ட கோலத்தில் ஏதோ வகுப்பு நடத்துவதற்கான பாடக் குறிப்புகளைப் பார்த்தபடி வீற்றிருந்தான் சத்தியமூர்த்தி.

மெல்லத் தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்த பாரதி, அவன் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றி ஆனால் ஏதோ செய்தாக வேண்டும் என்ற உணர்வுடன் மிகவும் தொலைவில் விலக்கிவைத்து வணங்கி மரியாதை செய்யவேண்டிய பெரிய மனிதர் ஒருவரை எதிரே பார்த்துவிட்டாற் போல் பயபக்தியோடு கைகூப்பினாள். திடீரென்று அவளை அங்கே எதிர்பாராமல் சந்தித்த பரபரப்பைச் சிறிதும் காண்பித்துக் கொள்ளாமல் ' என்ன?... செளக்கியமாயிருக்கிறீர்களா?" என்று நிதானமாகச் சிரித்தபடி சுகம் விசாரித்தான் சத்தியமூர்த்தி. அந்தச் சிரிப்பும் அந்த முகமும் அந்தக் கண்களும், மின்னலாய் எதிரே வீற்றிருக்கும் அந்தக் கம்பீரத் திருஉருவமும், தரையில் பூத்தசெந்தாமரைகளாய் இலங்கும் அந்தக் கால்களும் இப்போது தான் ஆசைப்படக் கூடாதனவாகி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/606&oldid=595869" இலிருந்து மீள்விக்கப்பட்டது