பக்கம்:பொன் விலங்கு.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 611

கண்ணாயிரம் வந்து சமையற்காரர் எங்கோ வெளியில் போய் இருப்பதாகவும் ஜமீன்தாருக்கு 'குளுகோஸ் கரைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் மோகினியிடம் அவள் இதற்குச் சம்மதிக்காமல் போய் விடுவாளோ என்று பயத்தோடு பயமாகத் தயங்கியபடியே வேண்டினார். 'ஏன் நீங்களே கரைத்துக் கொடுக்கலாமே?" என்று மோகினி வேண்டா வெறுப்பாகக் கண்ணாயிரத்தைக் கேட்டபோது, "நானே கரைச்சுக் கொடுக்கத் தெரியாமே உன்னைக் கூப்பிடறதுக்கு இங்கே வந்து நிற்கலே...நான் கொடுக்கிறேன் அல்லது பக்கத்திலே நாய் மாதிரி நிற்கிறானே அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவன், அவனைக் கரைச்சுக் கொடுக்கச் சொல்றேன். வேறு யாரும் ஆளில்லாமல் உங்கிட்ட வந்து கெஞ்சலை. ஜமீன்தார் உடம்புக்குச் சுகமில்லாமல் படுத்தப்புறம் நீ அவர் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை...அவரிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை விசாரிக்கக்கூட இல்லை... அவர் உன் மேலே ரொம்பக் கோபமாயிருக்காரு, அதனாலேதான் சொன்னேன். உன் கையாலே நீயே குளுகோஸ் கரைச்சு எடுத்துக்கிட்டுப் போனியானா அவருடைய கோபம் தணியும்-' என்று கண்ணாயிரம் பதில் கூறினார். தான் ஜமீன்தாருக்குக் குளுகோஸ் கரைத்துக் கொடுக்க மறுத்தால் அந்த வேலையைத் தன் உயிர் அன்பராகிய சத்தியமூர்த்தியின் தந்தையிடம் சுமத்தித் தான் மறுத்த கோபமும் உடன் சேர அந்த அப்பாவிக் கிழவரை அவர்கள் விரட்டு விரட்டென்று விரட்டப் போகிறார்களே என்ற எண்ணத்தினால் மறுபேச்சுப் பேசாமல் ஜமீன்தாருடைய அறையில் போய் அவருக்குக் குளுகோஸ் கரைத்துக் கொடுத்தாள் மோகினி.

'மோகினி ஒரு நிமிஷம் நில்லு! உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.உன்னைப் பார்த்தாலேயே எனக்கு உடம்பு தேறிடும் போலேயிருக்கு" என்று பல்லிளிக்கத் தொடங்கிய ஜமீன்தாரிடம், 'பாரதி காலேஜுக்குப் போயி உடம்புக்கு இழுத்து விட்டுவிட்டு வந்திருக்கா... நான் அவளைக் கவனிக்கணும்' என்று கூறிக் கடுமையாக மறுத்துவிட்டுத்திரும்பினாள் மோகினி. கண்ணாயிரம் சிறிது நேரத்தில் எங்கோ வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். ஜமீன்தாருக்கு இரவில் சாப்பாடு இல்லை. ஒட்ஸ் கஞ்சி போட்டு அவருடைய அறையில் கொண்டுபோய்க் கொடுத்தாயிற்று. சமையற்காரர் இல்லாததனால் தானாகவே எடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/613&oldid=595877" இலிருந்து மீள்விக்கப்பட்டது