பக்கம்:பொன் விலங்கு.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 619

கண்ட காட்சியினால் மனத்தின் அமைதியும் நிதானமும் குலைந்து போய்ப் புயல்வேகத்தில் மின்னல் நுழைந்தாற் போல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த ஜமீன்தாரையும் அவருக்கு அருகிலே நின்ற மோகினியையும் கடந்து வீட்டிற்குள்ளே சென்றான் சத்தியமூர்த்தி. பாரதி உடல் நலமின்றிப் படுத்திருந்த அறையை அடைவதற்கு முன் உள்கூடத்தில் நேர் எதிர்புறத்துச் சுவரில் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் ஒருகணம் தயங்கி நின்றான் அவன். முதலில் கவனிக்காமலிருந்து அவள் உள்ளே நுழைந்தபோது மட்டுமே நிமிர்ந்து நோக்கி முறைத்துப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்த ஜமீன்தார் முகத்தை வேறுபக்கமாக வெறுப்போடு திருப்பிக் கொண்டார். வருவார் வருவார் என்று ஆசையோடு காத்திருந்தவர் வந்து படியேறி உள்ளே நுழைந்ததும், பின்னால் ஓடிப்போய் உபசரிக்கமுடியாமல் ஜமீன்தார் பக்கத்திலிருந்து தன் ஆவலை அடியோடு கட்டுப்படுத்திக் கொள்ளும்படி செய்துவிட்ட வேதனையோடு தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்த மோகினியின் பார்வை-உள் கூடத்தில் அவனுடைய கண்கள் மேலே மாட்டியிருந்த படங்களில் எந்தப் படத்தைப் பார்த்துத் தயங்கினவோ அதைத் தானும் சந்தித்தன. கெட்டசொப்பனம் போன்ற அந்தப்படத்தைப் பார்த்து அவள் தீயை மிதித்தவள் போலானாள். 'எப்போது அந்தப் படத்தை எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? யார் அதை அங்கே கொண்டுவந்து மாட்டினார்கள்?' என்பதொன்றுமே புரியாமல் அவளுக்குத் தலைசுற்றியது. என்ன அக்கிரமம் இது? என்று கொதித்துக் குமுறும் மனநிலையோடு உள்ளே விரைந்தாள் அவள் நிலைக்கண்ணாடி அளவுக்குப் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த அந்த வண்ணப் புகைப்படத்தில் அவளும் ஜமீன்தாரும் கழுத்தில் ரோஜாப்பூ மாலையணிந்து மணமக்களைப்போல் அருகருகே நிற்பதாகத் தெரியக் கண்டு பாதாதி கேச பரியந்தம் நடுங்கினாள் அவள். 'கழுத்தில் ரோஜாப்பூ மாலையோடும் வாயிதழ்களில் நாணப் புன்முறுவலோடும் இப்படி ஒரு புகைப்படத்தை நான் எடுத்துக் கொண்டதே இல்லையே' என்று கொதிக்கும் மனத்தோடு அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/621&oldid=595886" இலிருந்து மீள்விக்கப்பட்டது