பக்கம்:பொன் விலங்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 81

எதிராளியைப் புரிந்து கொள்ள விடாமல் பாமரர்போல் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார் அவர். மல்லிகைப் பந்தல் ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்து பின்பு கவர்னராக அவர் கெளரவப் பதவி பெற்றபோது அவருடைய ரோட்டரி கவர்னர் பதவிக் காலத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் கன்வென்ஷன் ஒன்று மல்லிகைப் பந்தலில் நடைபெற்றது. அதற்காக மல்லிகைப் பந்தலுக்கு விருந்தினராய் வந்திருந்த கனடா நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர்பூபதியோடுநாலைந்து நாட்கள் பழகிவிட்டுப்பிரிந்து செல்லும்போது நிகழ்ந்த விருந்து ஒன்றில் அவரை இந்தியாவின் 'கமர்ஷியல் மாக்னேட் (தொழில் மன்னர்கள் அல்லது வாணிக வித்தகர்கள்)களில் தலைசிறந்த ஒருவராக வருணித்தார். இந்தப் பெருமையெல்லாம் தன் தந்தைக்குக் குறைவின்றி இருப்பது பாரதிக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் அப்போது அவர் சத்தியமூர்த்தி விண்ணப்பம் செய்திருந்த அதே பதவிக்கு மனுச் செய்திருக்கும் இன்னொரு வரையும் தனக்கு எதிரே நீண்ட நேரமாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. சத்திய மூர்த்திக்குப் போட்டியாக வந்திருக்கும் மனிதனிடம் தந்தை பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளரக் காரணமில்லாததொரு வெறுப்பையும் கோபத்தையும் அவள் அடைந்து கொண்டிருந்தாள். எதன் காரணமாகவோ பொறுமையிழந்து ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்புக் கொண்டு தவித்தாள் அவள். இன்னும் அப்பாவின் அறைக்கு வெளியில் வராந்தாவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தால் அப்பாவே எழுந்து வந்து தன்னைப் பார்க்க நேரிட்டுவிடுமோ என்ற பயமும் தயக்கமும் அவள் மனத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டன. அப்பாவின் அறை வழியே வீட்டுக்குள் செல்லுவது போல் சென்றால் வந்திருப்பவர் யார் என்பதையும் பார்த்து விடலாமே என்று அவள் மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது கல்லூரிக்கார் வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்து பிரின்ஸ்பாலும் ஹெட் கிளார்க்கும் இறங்கி வந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தையின் அறையை நோக்கி வருவதாகத் தென்படவே அந்த வேளையில்தான்.அங்கே வராந்தாவில் தயங்கி நிற்பது நன்றாயிராது என்று எண்ணியவளாக உள்ளே செல்வதற்காக விரைந்தாள் பாரதி.

பொ. வி - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/83&oldid=595978" இலிருந்து மீள்விக்கப்பட்டது